இன்று நீட் தேர்வு 05.05.2019


எம்பிபிஎஸ் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து இம்முறை 1.4 லட்சம் பேர் தேர்வெழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 12 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேசிய தேர்வுகள் முகமை நீட் தேர்வை நடத்துகிறது. இம்முறை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது.மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கி 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. தேர்வு மையத்துக்கு மாணவர்கள் அரைமணி நேரத்துக்கு முன்னதாக வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டுகளை கொண்டு வருவது அவசியம். ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்த அதே புகைப்படத்தை எடுத்து வர வேண்டும். பாஸ்போர்ட், ஆதார், பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் அசல் ஆவணத்தை எடுத்து வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வுக் கூடத்தில் உதவியாளர்களை அழைத்து வரத் தகுதியுள்ள சலுகை பெறும் மாற்றுத்திறனாளிகள், அதற்குரிய அனுமதி சான்றுகளைக் கட்டாயம் எடுத்து வர வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்கள் அரைக்கை சட்டைகளைத்தான் அணிய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு தேர்வுக் கூடத்திலேயே பேனா வழங்கப்படும். பெண்கள் நகைகளை அணிந்து வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ஆம் தேதி வெளியாக உள்ளன.


ஒடிஸாவில் ஒத்திவைப்பு:"பானி' புயலால் ஒடிஸா மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.