10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மே 13-க்குள் திருத்தம்செய்யலாம்

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப் பெண் சான்றிதழ்களில் மே 13-ம் தேதிக்குள் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இணை இயக்குநர் செ.அமுதவல்லி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பெயர் பட்டியல் தயாரிக்க போதுமான கால அவகாசமும், திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. எனினும், சில பள்ளிகளில் இருந்து தொடர்ந்து திருத்தம் கோரி விண்ணப்பங்கள் வருகின்றன. எனவே, அனைத்து பள்ளிகளுக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களின்பெயர் பட்டியலில், தலைப்பு எழுத்து, பெயர், பிறந்த தேதி, பயிற்று மொழி, புகைப்படம், பள்ளியின் பெயர் ஆகிய விவரங்களில் மட்டும் திருத்தங்கள் மேற் கொள்ள இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது.அதன்படி பள்ளி தலைமையாசிரியர்கள் இன்றைக்குள் (மே 9) பெயர்ப் பட்டியலில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களின் விவரங்களை சமர்பிக்க வேண்டும். இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் நாளை (மே 10) முதல் மே 13-ம் தேதிக்குள் தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் இருந்து பெறப்படும் திருத்தங்களை தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


மாணவர்கள் நலன் கருதி பிழையில்லாத மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு மாறாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கிய பின்னர், அதில் திருத்தம் கோரி விண்ணப்பங்கள் வந்தால் சம்பந்தபட்ட பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.