1500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டம்: பள்ளிக் கல்வித்துறை


தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் 1,500 பேருக்கு உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கம் கேட்டு விரைவில் நோட்டீஸ் அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களைப் பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


மேலும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தநிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் விவரங்களை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை அனுப்பி வருகிறது. இதையடுத்து தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு இரண்டு வாரங்களுக்குள் நோட்டீஸ் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதையடுத்து அந்த நோட்டீஸுக்கு ஆசிரியர்கள் பதிலளிக்க 10 நாள்கள் அவகாசம் வழங்கப்படும். பின்னர் ஆசிரியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளையில் நீதிமன்ற உத்தரவுப்படி 1,500 ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஏப்ரல் மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.