Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 2, 2019

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கடைசி நாள் மே 17

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஏப்.29-ஆம் தேதி முதல் மே 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:



தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் முதலாமாண்டு பட்டயப் படிப்பு பொதுப் பிரிவு, சிறப்பு ஒதுக்கீடு, பகுதி நேரப் படிப்புச் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் அந்தந்தக் கல்லூரிகளில் ஏப்.29 தொடங்கி வரும் மே 17-ஆம் தேதி வரை கல்லூரி வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். தொழிற்படிப்புடன் கூடிய பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களும் அத்தகைய படிப்பு நடத்தப்படும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மேற்குறிப்பிட்ட நாள்களில் வழங்கப்படும்.



கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ.150 ஆகும். தமிழகத்தைச் சேர்ந்த பட்டியல், பழங்குடி இனத்தவருக்கு விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது. அவர்கள் விண்ணப்பத்தை இலவசமாகப் பெற சாதிச் சான்றிதழ் சான்றொப்பமிட்ட நகல் சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பப் படிவங்களை நேரடியாக வாங்க விரும்புவோர் ரூ.150-ஐ ரொக்கமாக முதல்வரிடம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். அஞ்சல் மூலம் பெற விரும்புவோர் ரூ.150-க்கான கோடிட்ட வங்கி கேட்பு வரைவோலையினை சம்பந்தப்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பெயரில் எடுத்து சுய விலாசமிட்ட ரூ.15-க்கான தபால் தலை ஒட்டிய உறையுடன் அந்தந்த கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 17 ஆகும் என அதில் கூறப்பட்டுள்ளது.