கால்நடை மருத்துவப் படிப்பு: பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நிகழாண்டில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கல்லூரிகளும், ஆராய்ச்சி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. அங்கு கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புப் படிப்புகளுக்கு 360 இடங்கள் உள்ளன. அவற்றில், 54 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக வழங்கப்படுகின்றன.

அதேபோன்று, கோழி மற்றும் பால்வளத் தொழில்நுட்பப் பட்டப் படிப்புகளுக்கு 100 இடங்கள் உள்ளன. அதில், உணவு தொழில்நுட்பப் படிப்பில் ஆறு இடங்கள் மத்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்திற்கு ஒதுக்கப்படுகிறது. இந்த நிலையில், நிகழாண்டில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாணவர் சேர்க்கை நீட் அடிப்படையில் நடைபெறுமா அல்லது பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.


இதுகுறித்து, பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக் குழுவின் தலைவர் செல்வகுமார் கூறுகையில், அகில இந்திய ஒதுக்கீட்டுகான இடங்களுக்கு மட்டுமே நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும்; மாநில ஒதுக்கீட்டில் உள்ள 400 இடங்களும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே நிரப்பப்படும் என்றார். இதன் மூலம் அந்தப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமா? இல்லையா? என்பது தொடர்பாக மாணவர்களிடையே நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.