Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 3, 2019

பொறியியல் கலந்தாய்வு: ஜூன் 20-இல் தொடக்கம்: ஜூலை 3 முதல் 28 வரை பொதுப் பிரிவு கலந்தாய்வு


நடப்பு கல்வியாண்டுக்கான (2019-20) பி.இ., பி.டெக். படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்-லைன் கலந்தாய்வு வரும் ஜூன் 20- ஆம் தேதி தொடங்க உள்ளது.
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி ஜூலை 28 வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.


அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், அதன் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்-லைன் கலந்தாய்வை இவ்வாண்டு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது. கலந்தாய்வில் பங்கேற்க ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வியாழக்கிழமை (மே 2) தொடங்கியது.www.tneaonline.in அல்லது www.tndte.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் வீட்டில் இருந்தபடியே, விண்ணப்பிக்கலாம், அல்லது மாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 43 கலந்தாய்வு உதவி மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மே 31 கடைசி நாளாகும்.


கலந்தாய்வு எப்போது?: 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான ஆன்-லைன் கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. முன்னதாக, ஜூன் 3-ஆம் தேதி, விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண் வெளியிடப்படும். ஜூன் 6 முதல் 11-ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு உதவி மையங்களில் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஜூன் 17-இல் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். பின்னர் முதல்கட்டமாக சிறப்புப் பிரிவினருக்கான ஆன்-லைன் கலந்தாய்வு ஜூன் 20-இல் தொடங்கப்படும். இந்தப் பிரிவினருக்கும், பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கும் சென்னையில் நேரடியாகக் கலந்தாய்வாக நடத்தப்படும். ஜூன் 20-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வும், ஜூன் 21-இல் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும், ஜூன் 22-இல் விளையாட்டுப் பிரிவினருக்குமான கலந்தாய்வு நடத்தப்படும். பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை கலந்தாய்வு நடத்தப்படும்.


பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு:
பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி ஜூலை 28-ஆம் தேதி வரை நடத்தப்படும். இந்த மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்கலாம். பொதுப் பிரிவு கலந்தாய்வுக்குப் பின்னர், பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்து உடனடித் தேர்வு மூலம் தேர்ச்சிபெற்றவர்களுக்கான துணைக் கலந்தாய்வு ஜூலை 29-ஆம் தேதியும், காலியாக இருக்கும் எஸ்.சி(ஏ) பிரிவு இடங்களில் எஸ்.சி. பிரிவு மாணவர்களைச் சேர்ப்பதற்கான கலந்தாய்வு ஜூலை 30- ஆம் தேதியும் சென்னையில் மட்டும் நேரடியாக நடத்தப்படும். ஜூலை 30-இல் கலந்தாய்வு முடிக்கப்பட்டு, ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.