ஒவ்வொரு வாடிக்கையாள‌ர் அக்கவுன்ட்டிலும் 500 டாலர் - சுந்தர் பிச்சை அதிரடி


"சுந்தர் பிச்சை எதுவும் தேர்தலில் நிற்கப்போகிறாரா, நிஜமாகவே தேர்தலில் வென்றால், தலைக்கு 500 டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் 35,000 வழங்கப் போகிறாரா" என ஆலாய் பறக்கிறவர்கள், உங்கள் கற்பனை சிறகை முறித்துக்கொள்ளுங்கள். கூகிள் 500 டாலர் வழங்க முடிவெடுத்து இருப்பது எல்லாருக்கும் அல்ல. ஜனவரி 2017ஆம் ஆண்டுக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட‌ கூகுள் விற்பனை செய்த பிக்சல் போன்களில் குறைபாடு இருந்துள்ளது.


குறைபாடு இருப்பது தெரிந்தும் விற்பனையை கூகுள் தொடர, கடுப்பான வாடிக்கையாளர்கள் வழக்கு தொடர்ந்துவிட்டனர். தற்போது, குறைபாடுடன் இருந்த அலைபேசிகளை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு 500 டாலர் வரை நஷ்ட ஈடு வழங்க கூகுள் முன்வந்துள்ளது. கூகுளை பொறுத்தவரை எல்லா அலைபேசிகளும் குறைபாடுடன் விற்பனை செய்யப்படவில்லை, விற்பனைக்கு வந்த மொத்த அலைபேசிகளில் 1 சதவீதத்திற்கும் குறைவான அலைபேசிகளிலேயே பிரச்னை இருந்தது என்பது அவர்கள் நிலைப்பாடு.


வழக்கு இப்போது விசாரணையில் நிலுவையில் இருக்கும்போதே, பிரச்னைக்கு ஏற்ப இழப்பீடு தர முன்வந்துள்ளது கூகுள். இதுல ஒரு காமெடி இருக்கிறது. இந்த மாதிரி என் போன்ல பிரச்னை இருக்குன்னு சொன்ன வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வேறொரு போனை கூகுள் அளித்திருந்தது முன்பே. ஆனால், அப்படி திரும்ப வழங்கப்பட்ட போனிலும் அதே பிரசினை இருந்திருக்கிறது.


இந்த மாதிரி இரண்டு முறை அலைக்கழிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 500 டாலர் என்றும், குறைபாடுள்ள‌ அலைபேசியை மாற்றாமல் அதனுடையே மல்லுகட்டிய மாவீரர்களுக்கு தலா 350 டாலர் என்றும், எந்த பிரச்னையுமே போனில் இல்லை ஆனா எங்க போனை நீங்க வாங்குன உங்க ஒரே மன தைரியத்தைப் பாராட்டி இந்தாங்க 20 டாலர் என அனைத்து வாடிக்கையாளருமுக்கும் பிரித்து தர டிவு செய்திருக்கிறது கூகுள்.


சமீபத்தில் சென்னையின் பிரபல நிறுவனத்தின் குறைபாடுள்ள‌ போனை வாங்கிவிட்டு வேறு வழியில்லாமல் அதனை கடை வாசலிலேயே தீயிட்டு கொளுத்திய வாடிக்கையாளரை பற்றிய‌ செய்தி ஞாபகத்துக்கு வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.