Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 25, 2019

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு 5 ஆண்டு கால அவகாசம் வழங்க கோரிக்கை


பரமத்திவேலூரில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற நாமக்கல் மாவட்ட அளவிலான ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம் சங்க அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.


இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மேலும் 5 ஆண்டு கால அவகாசம் அளிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பொதுமாறுதல் கலந்தாய்வு ஆகியவைகளை குழந்தைகளின் கல்வி நலன் கருதி ஜூன் முதல் வாரத்தில் நடத்திட வேண்டும். அங்கன்வாடி மைய மழலையர் பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கும் கொள்கை முடிவினை தமிழக அரசு கைவிட வேண்டும். பள்ளிகள் ஒருங்கிணைப்புத் திட்டத்தின் கீழ் வட்டார வளமைய அலுவலகங்களை கல்வித் துறைக்கான பொதுசேவை மையங்களாக அறிவிக்க வேண்டும்.


எருமைப்பட்டி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் பல லட்சம் ரூபாய் நிதி பரிவர்த்தனை முறைகேடுகள் நடந்துள்ளன. இதன் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை கூட்டுறவுத் துறையினர் மற்றும் மாவட்ட இணைப் பதிவாளர் மேற்கொள்ள வேண்டும். மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு இக்கூட்டம் சார்பில் வாழ்த்து தெரிவித்துக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சங்கர் வரவேற்று பேசினார்.
மாநில தலைமை நிலைய செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் முருகசெல்வராசன் உரையாற்றினார். முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் வடிவேல் நன்றி கூறினார்.