Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 2, 2019

தனி நுழைவுத் தேர்வு அறிவிப்பு ரத்து? அண்ணா பல்கலை. இன்று முடிவு


எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு மீண்டும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை (டான்செட்) நடத்தும் வகையில் திருத்தம் வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, வழக்கம்போல் ஒரே நுழைவுத் தேர்வை நடத்தவும், அதற்காக திருத்தம் வெளியிடவும் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா தலைமையில் வியாழக்கிழமை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டு திருத்தம் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


அண்ணா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக, உயர் கல்வித் துறை அதிகாரிகளின் கார்களுக்கு பெட்ரோல் நிரப்பப்பட்டு வந்த நடைமுறையை நிறுத்தியது, பணியாளர் நியமனத்தில் அரசியல் தலையீட்டை நிறுத்தியது போன்ற அதிரடி நடவடிக்கைகளை பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா எடுத்தார்.
இதன் காரணமாக, அவருக்கும் தமிழக உயர் கல்வித் துறைக்கும் மோதல் போக்கு மூண்டது. அதன் ஒரு பகுதியாக, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக் குழுவில் இணை தலைவராக தொழில்நுட்ப கல்வி இயக்குநரை தமிழக அரசு நியமித்தது. இதனால் அந்தக் குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து துணைவேந்தர் சூரப்பா விலகினார். இதன் காரணமாக, 201920ஆம் ஆண்டு பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பதிலாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகமே நடத்துகிறது.


பல்கலைக்கழகத்தின் நிதி நிலையை உயர்த்துவதற்காக, ஒருசில கட்டணங்களை உயர்த்த பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதற்கு அனுமதி மறுத்து, கட்டண உயர்வுக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டது.
இந்த தொடர் மோதல் போக்கு காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என 9 கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற படிப்புகளுக்கு தனியாக அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வை (ஏயுசெட்) அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்தது. இதற்கு மே 6 முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதுவரை தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலைஅறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு டான்செட் என்ற ஒரே நுழைவுத் தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏயுசெட் அறிவிப்பால், இந்தப் படிப்புகளுக்கு இரண்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் நிலை உருவானது.


இந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும், அதனை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்றும் தமிழக உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. மேலும் இந்தத் தேர்வை நடத்தும் குழுவில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், கல்லூரி கல்வி இயக்குநர் ஆகியோர் இடம் பெற்றிருப்பதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி கூறியது:


தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வை நடத்துவது என அண்ணா பல்கலைக்கழகமும் முடிவு செய்துள்ளது. இதற்காக துணைவேந்தர் சூரப்பா தலைமையில் வியாழக்கிழமை காலை பல்கலைக்கழகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும். இந்தக் கூட்டத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்குநரும் பங்கேற்பார். ஏற்கெனவே உள்ளதுபோல டான்செட் என்ற பெயரிலேயே இந்த நுழைவுத் தேர்வை நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் ஏயுசெட் தேர்வை அறிவித்ததால், அதை ரத்து செய்வதற்கு திருத்தம் ஒன்றும் வெளியிடப்படும். இதன் மூலம் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வாக மீண்டும் டான்செட் தேர்வே நடத்தப்படும் என்றார்.