ராணுவத்தில் வேலை வேண்டுமா...? விண்ணப்பிக்க இன்றே கடைசி


நெய்வேலி பாரதி மைதானத்தில் இந்திய ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் ஜூன் 6-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே18) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை தலைமைச் செயலக பொதுத்துறை சிறப்புச் செயலரகம் (ராணுவம்) சார்பில், இந்திய ராணுவத்தில் தொழில் நுட்ப வீரர், விண்வெளி ஆயுதப் பொருள் பரிசோதகர், செவிலியர், உதவியாளர், எழுத்தர், பண்டக சாலை காப்பாளர், பொதுசேவையாளர், விற்பனையாளர் உள்ளிட்ட பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ளன.
இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தகுதியானவர்கள் நெய்வேலி பாரதி மைதானத்தில் ஜூன் 6-ஆம் தேதி 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஆள்சேர்ப்பு முகாமுக்கு விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி, சென்னை தலைமைச் செயலக சிறப்புச் செயலர், பொதுத் துறை (ராணுவம்) இணையதளமான www.joinindianarmy.nic.in இதன்மூலம் மே 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு மே 20-ஆம் தேதிக்கு பிறகு, இணையதளம் வாயிலாக நுழைவு அட்டை வழங்கப்படும். ஜூன் 6-ஆம் தேதி முதல் நெய்வேலியில் நடைபெறும் ஆள்சேர்ப்பு முகாமுக்கு நுழைவு அட்டையில் கூறப்பட்ட ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் கொண்டு வரவேண்டும்.


முகாமுக்கு வரக்கூடிய நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் மே 21-ஆம் தேதி முதல் நுழைவு அட்டையில் தெரிவிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.