இணைப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கு யூஜிசி தகுதி இனி கட்டாயம்


பல்கலைக்கழகங்களின் இணைப்பு கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கும் யூஜிசி கல்வி தகுதி அவசியம். இல்லாவிட்டால் அந்த கல்லூரியின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று பல்கலைக்கழகங்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதால், சுயநிதி கல்லூரி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் தற்காலிக உதவி பேராசிரியர்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் எந்த கல்வி தகுதியும் இன்றி நிர்வாகத்திற்கு வேண்டப்பட்ட நபர்களை உதவி பேராசிரியர்களாக நியமனம் செய்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை சம்பளம் கொடுத்து வருகின்றனர்.


இந்நிலையில், சட்டக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் கவுரவ பேராசிரியர்கள் நியமனத்தில் நடந்த குளறுபடி குறித்து தொடரப்பட்ட வழக்கில் உயர்கல்வித்துறைக்கு நீதிமன்றம் சில நடைமுறைகளை பரிந்துரை செய்தது. இதில், மாணவர்களின் நலன் கருதி யூஜிசி நடைமுறைகளின் படி கல்வித் தகுதி உள்ள உதவி பேராசிரியர்களை நியமனம் செய்து அதற்கான சம்பளம் வழங்கவேண்டும் என தமிழக உயர்கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள திருவள்ளுவர், அழகப்பா, மனோன்மணியம் சுந்தரனார், மதுரை காமராஜர் உள்ளிட்ட அனைத்து பல்கலைக்கழகங்களும் தங்களது இணைப்பு கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளன.


அதில், ''இணைப்பு கல்லூரிகளில் உள்ள சுயநிதி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள் கட்டாயம் யூஜிசி நிர்ணயம் செய்துள்ள கல்வி தகுதியான பிஎச்டி, நெட், ஸ்லெட் இவற்றில் ஒன்று முடிந்திருக்க வேண்டும். இதன் விபரங்களை வரும் 30ம் தேதிக்குள் கல்லூரி முதல்வர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும். சில பல்கலைக்கழகங்கள் தகுதியில்லாத உதவி பேராசிரியர்களை கொண்டு பாடம் நடத்தினால், அந்த பாடத்திட்டத்திற்கு பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அனுமதி ரத்து செய்யப்பட்டு அருகில் உள்ள இணைப்பு கல்லூரிக்கு மாணவர்கள் மாற்றப்படுவார்கள்'' என கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையால் சுயநிதி கல்லூரி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.'அரசு கல்லூரிக்கும் அவசியம்'

பிஎச்டி முடித்தவர்கள் தரப்பில் கூறுகையில், ''யூஜிசி விதிமுறைகளின் படி கல்வித்தகுதி உள்ளவர்கள் மட்டுமே கல்லூரிகளில் பணியாற்றவேண்டும் என்ற உத்தரவை வரவேற்கிறோம். சுயநிதி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் யூஜிசி கல்வித்தகுதி (பிஎச்டி, நெட், ஸ்லெட் ஏதேனும் ஒன்று) கட்டாயம் என்றால், அரசு கல்லூரிகளில் பணியாற்றும் தகுதியில்லாத கவுரவ விரிவுரையாளர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும். சில தனியார் கல்லூரிகளின் முதல்வர்கள் யூஜிசி தகுதியில்லாமல் எம்பில் பட்டத்துடன் பணியாற்றி வருகின்றனர்'' என்றனர்.இணைப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கு யூஜிசி தகுதி இனி கட்டாயம்