கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு: பல்கலைக்கழக சிண்டிகேட் அனுமதி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க, பல்கலைக்கழக சிண்டிகேட் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் வெள்ளிக் கிழமை மாலை நடைபெற்றது.


இக் கூட்டத்துக்கு, துணைவேந்தர் எம். கிருஷ்ணன் தலைமை வகித்தார். உயர்கல்வித் துறை சட்டப்பிரிவு இயக்குநர் சந்தோஷ்குமார், சிண்டிகேட் உறுப்பினர்கள் தீனதயாளன், ராமகிருஷ்ணன், ராஜ்குமார் மற்றும் துறைத் தலைவர்கள் பங்கேற்றனர். சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறியதாவது: பல்கலைக்கழகத்தில் எவ்வித நிதி உதவியுமின்றி முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆராய்ச்சி நிதி உதவி அளிப்பதற்கு சிண்டிகேட் அனுமதி பெறப்பட்டுள்ளது.


பல்கலைக்கழகத்தின் கருத்தரங்கக் கூடத்துக்கு, குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரைச் சூட்டுவது, பல்கலைக்கழகக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரவுரையாளர்களுக்கு பணி அனுபவத்தின் அடிப்படையில் ரூ.25 ஆயிரம் வரை ஊதிய உயர்வு அளிப்பது, பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் 300-க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்களை தகுதியின் அடிப்படையில் பணிநிரந்தரம் செய்ய குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


மேலும், பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர்கள் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களையும் 100 நாள்களுக்குள் பூர்த்தி செய்யுமாறு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகளை தொடங்குவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், அதற்கு சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.