Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 3, 2019

பொறியியல் மாணவர்களும் அரசியல் அமைப்புச் சட்டம் படிப்பது இனி கட்டாயம்


பொறியியல் மாணவர்கள் இனி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் குறித்தும் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் அண்ணா பல்கலைக்கழக கல்வித் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தவும், இந்தியாவின் வரலாறு, அரசியலமைப்புச் சட்டம் குறித்து உயர் கல்வி பயிலும் மாணவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவுறுத்தலின்படி, பொறியியல் கல்வித் திட்டத்தில் இந்த மாற்றங்களை அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ளது.


பொறியியல் மாணவர்களுக்கான கல்வித் திட்டம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகத் துறைகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, கட்டடவியல் பள்ளி, குரோம்பேட்டை எம்ஐடி ஆகிய 4 கல்லூரிகளுக்கு புதிய கல்வித் திட்டத்தை (கல்வித் திட்டம் 2019) பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நான்கு கல்லூரிகளிலும் 2019-20-ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெறும் மாணவர்கள் இந்த புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே படிப்பை மேற்கொள்வர். பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள 500-க்கும் அதிகமான இணைப்புக் கல்லூரிகளுக்கு 2021-ஆம் ஆண்டு இந்த புதிய கல்வித் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.


இந்த புதிய கல்வித் திட்டத்துக்கு, அண்ணா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பல்கலைக்கழக கல்விக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, பொறியியல் மாணவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம், சுற்றுச்சூழல், மேலாண்மைத் தத்துவங்கள் குறித்து படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார், பல்கலைக்கழக கல்விக்குழு மைய இயக்குநர் ஆர்.ராஜூ ஆகியோர் கூறியது:
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(ஏஐசிடிஇ) அறிவுறுத்தலின் அடிப்படையில் பொறியியல் கல்வித் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பொறியியல் மாணவர்களுக்கான 4 ஆண்டு படிப்புக்கான கிரெடிட் மதிப்பானது அதிகபட்சம் 165 ஆகவும், குறைந்தபட்சம் 161 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.


இந்த கிரெடிட் மதிப்பு இதுவரை 171 - 180 வரை இருந்தது. இதன் மூலம் மாணவர்கள் கூடுதல் விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்து படிக்க முடியும் என்பதோடு, வேறு துறைகளுக்குச் சென்று அதிகபட்சமாக 2 படிப்புகளை மேற்கொள்ளவும் முடியும். மேலும், விருப்பப் பாடங்களை தவிர்த்துவிட்டு, ஆன்-லைன் படிப்பை மேற்கொள்ள மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவர்.
புதிய கல்வித் திட்டத்தின் படி, பொறியியல் மாணவர்கள் அனைவரும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதோடு, சுற்றுச்சூழல் குறித்தும், மேலாண்மைத் தத்துவம் குறித்து படிப்பதும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் புதிய மாறுதல்கள் அனைத்தும், முதல் கட்டமாக அண்ணா பல்கலைக்கழகத் துறைகளுக்கு அறிமுகப்படுத்தப்படும். அடுத்து, 2021 முதல் இணைப்பு பொறியியல் கல்லூரிகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றனர்.



உடனடித் தேர்வு முறை அறிமுகம்
புதிய 2019 கல்வித் திட்டத்தின்படி, பல்கலைக்கழகத்தின் நான்கு துறைகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு, இணைப்புப் பொறியியல் கல்லூரிகளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது போன்று அரியர் தேர்வு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை, இந்த மாணவர்களுக்கு அரியர் நடைமுறை கிடையாது. இனி பல்கலைகக்கழக துறைகளில் படிக்கும் மாணவர்களும் இணைப்புக் கல்லூரி மாணவர்களைப் போல அரியர் தேர்வை எழுத முடியும். அதுமட்டுமின்றி, பல்கலைக்கழகத் துறைகளில் படிக்கும் மாணவர்கள் கடைசிப் பருவமான 8-ஆம் பருவத்தில் மட்டும் வைக்கும் அரியர் பாடங்களை, மீண்டும் 6 மாதங்கள் கழித்துதான் எழுத வேண்டும் என்ற நிலையை மாற்றி, உடனடியாகத் தேர்வு எழுதும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.


அதற்காக, 8-ஆம் பருவ தேர்வு முடிவுகள் வெளியானதும், உடனடித் தேர்வு அறிவிக்கப்படும். இதில் பங்கேற்று அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உடனடியாக பட்டமும் வழங்கப்பட்டுவிடும்.
மாணவர்களின் நலன் கருதி இந்த நடைமுறையை பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த நடைமுறை 2021 முதல் இணைப்பு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என பல்கலைக்கழக கல்விக்குழு மைய இயக்குநர் ஆர்.ராஜூ கூறினார்.