மாற்றுச் சான்றிதழ்களில் சாதியை குறிப்பிடக்கூடாது: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் சாதியை குறிப்பிடக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும்போது சாதி என்ற இடத்தில் எந்தச் சாதியையும் குறிப்பிடாமல் வருவாய்த்துறை சார்பில் வழங்கப்பட்ட ஆவணத்தில் பார்க்கவும் என குறிப்பிடுமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

இது தொடர்பாக தக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏனெனில் வருவாய்த்துறை வழங்கும் சாதிச் சான்றே இறுதியானதும், ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல், பள்ளி மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழை பள்ளிகளில் கைப்பட எழுதி வழங்கத் தேவையில்லை. பள்ளிக் கல்வித்துறையின் எமிஸ் இணையதளம் மூலம் மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்து, அதனை பின்னர் தரவிறக்கம் செய்து, தலைமை ஆசிரியர் கையெழுத்துட்டு மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும்.

அதன்படி வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் மாணவர்களின் சாதியை குறிப்பிட தேவையில்லை.
இதனால் எமிஸ் இணையதளம் மூலம் இனி வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழ்களில் சாதியின் பெயர் குறிப்பிடப்படாது என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.