பதம்

பதம்


ஓரெழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து வந்தோ பொருள் தருவது பதம் எனப்படும்.

பதம், சொல், கிளவி, மொழி என்பன ஒருபொருள் தரும் சொற்களாகும்.

ஓரெழுத்து தனித்து நின்று பொருள் தரும் சொல்லை ஓரெழுத்து ஒரு மொழி என்பர்.

ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தரும் சொல்லை தொடர்மொழி என்பர்.

இப்பதம், பகாபதம், பகுபதம் என இரண்டு வகைப்படும்.

பகாபதம்

பகுதி, விகுதி எனப் பிரிக்க முடியாததும் பிரித்தால் பொருள் தராததுமான சொல் பகாபதம் எனப்படும்.

இப்பகாபதம் இரண்டு எழுத்து முதல் ஏழு எழுத்துகள் வரை அமையும்.

மாலை - இரண்டெழுத்துப் பகாபதம்
அறம் - மூன்றெழுத்துப் பகாபதம்
மார்கழி - நான்கெழுத்துப் பகாபதம்
பெருமிதம் - ஐந்தெழுத்துப் பகாபதம்
தர்ப்பணம் - ஆறெழுத்து பகாபதம்
உத்திராட்டாதி - ஏழெழுத்துப் பகாபதம்


என்பன போன்ற சொற்கள் இரண்டெழுத்து முதல் ஏழு எழுத்துகள் வரை பயின்று வந்த பகாபதத்திற்கான சான்றுகளாகும்

பெயர், வினை, இடை, உரி என்ற நான்கு சொல்லிலும் பகாபதம் வரும்.

ஆண், பெண், கல், நீர் - பெயர்ப் பகாபதம்
நட, சொல், பார், செய் - வினைப் பகாபதம்
போல், மற்று, மன், உம் - இடைப் பகாபதம்
சால, உறு, தவ, நனி - உரிப் பகாபதம்


பகுபதம்

பகுதி, விகுதி எனப் பிரிக்கக் கூடியதாகவும் பிரித்தால் பொருள் தருவதாகவும் அமையும் சொல் பகுபதம் எனப்படும்.

இப்பகுபதம் இரண்டெழுத்து முதல் ஒன்பது எழுத்துகள் வரை அமையும்.

கூனி - கூன்+இ - 2 எழுத்துப் 
பகுபதம்
கூனன் - கூன்+அன் - 3 எழுத்துப் 
பகுபதம்
தமிழன் - தமிழ்+அன் - 4 எழுத்துப் 
பகுபதம்
கருப்பன் - கருப்பு+அன் - 5 எழுத்துப் 
பகுபதம்
படித்தவர் - படி+த்+த்+அ+அர் - 6 எழுத்துப் 
பகுபதம்
அரங்கத்தான் - அரங்கம்+அத்து+ஆன் - 7 எழுத்துப் 
பகுபதம்
உத்திராடத்தான் - உத்திராடம்+அத்து+ஆன் - 8 எழுத்துப் 
பகுபதம்
உத்திரட்டாதியான் - உத்திரட்டாதி+ஆன் - 9 எழுத்துப் 
பகுபதம்

என்பன போன்ற சொற்கள் இரண்டெழுத்து முதல் ஒன்பது எழுத்துவரை பயின்று வந்த பகுபதத்திற்கான சான்றுகளாகும்.

பகுபத வகைகள்

பகுபதம், பெயர்ப் பகுபதம், வினைப் பகுபதம் என இரண்டு வகைப்படும்.

பகுபத உறுப்புகள்

பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி விகாரம் என்ற ஆறும் பகுபதத்தின் உறுப்புகளாகும்.

இந்த ஆறு உறுப்புகளும் பகுபதத்தில் கட்டாயம் இருக்க வேண்டிய உறுப்புகள் பகுதி, விகுதி என்பனவாகும்.

பிற உறுப்புகள் வரலாம், வராமலும் போகலாம்.

பகுதி

பகுபதத்தின் முதல் உறுப்பு பகுதி.

இப்பகுதி, பகாபதமாகவும் கட்டளைப் பொருளிலும் வரும்.

மேலும், பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு சொற்களிலும் இப்பகுதி அமையும்

எ.கா.,

பொன்னன் - பொன்+அன் - பொன் என்பது பெயர்ப்பகுதி
அறிஞன் - அறி+ஞ்+அன் - அறி என்பது வினைப்பகுதி
மற்றவன் - மற்று+அ+அன் - மற்று என்பது இடைப்பகுதி
கடியவை - கடி+அ+வை - கடி என்பது உரிப்பகுதி


விகுதி

பகுபதத்தின் இறுதி உறுப்பு விகுதி ஆகும்.

இவ்விகுதி, திணை, பால், எண், இடம் காட்டுவதாய் அமையும்.

எ.கா.,

செய்தான் - செய்+த்+ஆன்

இச்சொல்லின் உள்ள ஆன் என்ற விகுதியால் செயலைச் செய்தவன் உயர்திணை என்பதையும், அவன் ஆண்பால் என்பதையும் ஒருவன் என்பதையும் அவன் படர்க்கை என்ற இடத்தில் உள்ளான் என்பதையும் குறிப்பதைக் காணலாம்.

இடைநிலை

பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வருவதால் இதனை இடைநிலை என்பர்.

இந்த இடைநிலை, பெயர் இடைநிலை, வினை இடைநிலை என இரண்டு வகைப்படும். பெயர் இடைநிலை காலம் காட்டாது. வினை இடைநிலை காலம் காட்டும்.

பெயர் இடைநிலை

பெயர்ச்சொல்லில் வரும் இடைநிலை பெயர் இடைநிலை எனப்படும்.

ஞ், ச், வ், த், ஆத், அ என்பன பெயர் இடைநிலைகளாக வருவன.

அறிஞன் - அறி+ஞ்+அன் - ஞ்
தங்கச்சி - தங்கை+ச்+ச்+இ - ச்
புலவன் - புலம்+வ்+அன் - வ்
பார்ப்பாத்தி - பார்ப்பு+ஆத்+இ - ஆத்
மன்னவன் - மன்+அ+அன் - அ


என்ற இச்சொல்களில் பயின்று வந்த ஞ், ச், வ், ஆத், அ இடைநிலைகள் காலம் காட்டவில்லை.

காலம் காட்டும் பெயர் இடைநிலைகள்

பெயர் இடைநிலைகள் காலம் காட்டாது எனினும் வினையாலனையும் பெயரில் வரும் இடைநிலைகள் காலம் காட்டும்.

பார்த்தவன் - பார்+த்+த்+அ+அன் - த்

இச்சொல்லில் பயின்று வந்த த் என்ற இடைநிலை இறந்த காலம் காட்டுகிறது. இவ்வாறு வினையாலனையும் பெயரில் வரும் இடைநிலைகள் காலம் காட்டும். ஏனெனில் வினையாலனையும் பெயர்கள் அடிப்படையில் ஒரு வினைசொற்கள்.

வினை இடைநிலைகள்

வினைமுற்றின் இடையில் வரும் இடைநிலைகள், வினை இடைநிலைகள் எனப்படும்.

வினை இடைநிலைகள் காலம் காட்டும்.

காலம் காட்டும் நிடைநிலைகள்

த், ட், ற், இன் - இறந்த கால இடைநிலைகள்
கிறு, கின்று, ஆநின்று - நிகழ்கால இடைநிலைகள்
ப், வ் - எதிர்கால இடைநிலைகள்


எ.கா.,

செய்தான் - செய்+த்+ஆன் - த் இறந்தகால இடைநிலை
உண்டான் - உண்+ட்+ஆன் - ட் இறந்தகால இடைநிலை
கற்றான் - கல்+ற்+ஆன் - ற் இறந்தகால இடைநிலை
போயினான் - போ+இன்+ஆன் - இன் இறந்தகால இடைநிலை

நடக்கிறான் - நட+கிறு+ ஆன் - கிறு நிகழ்கால இடைநிலை
பார்க்கின்றேன் - பார்+கின்று+ஆன் - கின்று நிகழ்கால இடைநிலை
செல்லாநின்றான் - செல்+ஆநின்று+ஆன் - ஆநின்று நிகழ்கால இடைநிலை

காண்பான் - காண்+ப்+ஆன் - ப் எதிர்கால இடைநிலை
செல்வான் - செல்+வ்+ஆன் - வ் எதிர்கால இடைநிலை


சாரியை

பகுபத உறுப்புகளான பகுதியையும் விகுதியையும் அல்லது இடைநிலையையும் விகுதியையும் இணைப்பதற்குப் பயன்படும் பகுபத உறுப்பு சாரியை எனப்படும்.

பகுதி, விகுதி, இடைநிலை ஆகியவற்றுக்குப் பொருள் உண்டு.

ஆனால், சாரியைக்குப் பொருள் இல்லை.

இரண்டு பகுபத உறுப்புகளுக்கு இடையில் வந்து அவற்றை இணைப்பதே சாரியையின் செயற்பாடாகும்.

அன், அம், அத்து, அற்று, இன் முதலியன சாரியைகள் ஆகும்.

எ.கா.,

நடந்தனன் - நட + ந்த் + அன் + அன் = அன் சாரியை
புளியங்காய் - புளி + அம் + காய் = அம் சாரியை
மரத்தை - மரம் + அத்து + ஐ = அத்து சாரியை
சிலவற்றை - சில + அற்று + ஐ = அற்று சாரியை
வீட்டிற்கு - வீடு+இன்+கு = இன் சாரியை


சந்தி

தனக்கென ஓரு பொருள் இன்றி, பகுதி, விகுதி அல்லது பகுதி, இடைநிலை ஆகிய பகுபத உறுப்புகள் இணைப்பது(சந்திக்க வைப்பது) சந்தி எனப்படும்.

எ.கா.,

கிளி + ஐ கிளி + ய் + ஐ = கிளியை

இச்சொல்லில் ய் என்பது சந்தியாகும்.

விகாரம்

பகுதி, விகுதி, இடைநிலை ஆகிய உறுப்புகள் இணையும்போது அவற்றின் வடிவத்தில் ஏற்படும் மாற்றமே விகாரமாகும்.

பகுதி, சந்தி ஆகியன விகாரங்களாக வரும்.

எ.கா., வந்தனன் - வா(வ)+த்(ந்)+த்+அன்+அன்

இச்சொல்லில் உள்ள வ, ந் என்பன விகாரங்களாகும்.