பாலிடெக்னிக் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு சேர்க்கை: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கை பெற விண்ணப்பிப்பதற்கு வெள்ளிக்கிழமை (மே 10) கடைசி நாளாகும்.அதுபோல இந்தக் கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்க்கை பெற விண்ணப்பிப்பதற்கு மே 17 கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மத்திய பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இரண்டு ஆண்டுகள் ஐடிஐ படித்து முடித்தவர்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்க்கை பெற முடியும்.

இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வருகின்றன. அதுபோல, சென்னை தரமணியில் உள்ள அரசு மத்திய பாலிடெக்னிக் கல்லூரியிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும். அதுபோல, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான பாலிடெக்னிக் முதலாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்களும் விநியோகிக்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க மே 17 கடைசி நாளாகும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.