எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை: பணியில் உள்ள ராணுவத்தினர் வாரிசுகளுக்கும் முன்னுரிமை உண்டு: உயர்நீதிமன்றம் உத்தரவு


மருத்துவப் படிப்புகளில் பணியில் உள்ள ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு முன்னுரிமை பெறுவதற்கு எதிரான தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.


மதுரையைச் சேர்ந்த மாணவர் குறளரசன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பணியில் உள்ள ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு மத்திய அரசு வெளியிட்டுள்ள முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில், எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவப் படிப்பில் இடம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறபித்த உத்தரவு:
மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாக மத்திய அரசு 2017 நவம்பர் மாதம் 9 முன்னுரிமைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 8-ஆவது முன்னுரிமையாக, பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரர் 8-ஆவது முன்னுரிமை பட்டியலில் வருகிறார். இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறைச் செயலர் 2018 ஜூன் 1-இல் வெளியிட்ட அரசாணையில், மத்திய அரசின் முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றிருந்த 9 முன்னுரிமை ஒதுக்கீடுகளில் கடைசி (7 முதல் 9 வரையிலான) 3 முன்னுரிமை ஒதுக்கீடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் மனுதாரருக்கு முன்னுரிமையின் கீழ் ஒதுக்கீடு பெற முடியாமல் உள்ளது.


முன்னாள் ராணுவத்தினருக்கு சலுகை வழங்குவதைப் போல, ராணுவத்தில் தற்போது பணிபுரிபவர்களுக்கும் சலுகைகள் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள கடைசி 3 முன்னுரிமை ஒதுக்கீட்டை நீக்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ஏற்க முடியாது.
பணியிலுள்ள ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்காமல், உயர்கல்வியில் ராணுவத்தினருக்கான இடஒதுக்கீடு வழங்கும் நோக்கம் நிறைவேறாது. எனவே தமிழக அரசு 7 முதல் 9 வரையிலான முன்னுரிமை பட்டியலை நீக்கி வெளியிட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.


அபிந்தன் மகளுக்கு கிடைக்காது: மக்களால் உண்மையான ஹீரோவாக பார்க்கப்படும் விங் கமாண்டர் அபிநந்தன், தமிழகத்தை சேர்ந்தவர். இவரது மகள் அரசு மருத்துவக் கல்லூரியில் ராணுவத்தினருக்கான இடஒதுக்கீட்டு பிரிவில் எம்.பி.பி.எஸ். சேர நினைத்தால் முடியாது. ஆனால் அபிநந்தன் பதவியிலிருந்து விலகியிருந்தால், முன்னாள் ராணுவத்தினர் என்ற அடிப்படையில் அவரது மகளுக்கு மருத்துவ படிப்பில் இடம் வழங்கப்படும் நிலை இருக்கிறது. இந்த பாகுபாட்டை ஏற்க முடியாது என உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.