தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை: விண்ணப்பிக்க நாளை கடைசி

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்படி தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி பெற விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே 18)கடைசி நாளாகும்.
தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இலவச சேர்க்கை பெற கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் மே 18-ஆம் தேதி வரை ஏழைக் குழந்தைகளின் பெற்றோர் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனர்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான ஆய்வாளர் அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் கல்வித்துறை அலுவலகங்கள், பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள் தகுந்த சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து www.rte.tnschools.gov.in என்ற இணையத்தின் மூலமாக தாமாகவே விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இதற்கான அவகாசம் சனிக்கிழமையுடன் முடிவடைகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் கடந்த ஏப்ரல் 22 முதல் வியாழக்கிழமை மாலை வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.