பழைய ஓய்வூதிய திட்டம் அமல் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

"அரசு ஆசிரியர்கள் 12 லட்சம் பேர் மற்றும் அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்'' என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கோரிக்கை விடுத்தார்.மதுரையில் இக்கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் தலைவர் செல்லையா தலைமையில் நடந்தது.
பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பேசியதாவது: ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான பொய் வழக்குகள், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்து இருதரப்பு சுமூக உறவை அரசு ஏற்படுத்த வேண்டும்.


நிர்வாகிகளை அழைத்து பேசி பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். 'டெட்' தேர்வுக்கான அரசாணை வெளிவந்த நாளான 2011 நவ.,15 க்கு முன் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும்.தகுதி தேர்வை காரணம் காட்டி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 1,500 ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், குடும்பத்தினர், மாணவர்கள் நலன் கருதி சம்பளம் பிடித்த செய்யாமல் தேர்விலிருந்து முழு விலக்களிக்க வேண்டும்.


3 சதவீத அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதை போல் உடனடியாக தமிழக அரசும் வழங்க வேண்டும். கோரிக்கைளை வலியுறுத்தி ஜூன் 7ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றார்.நிர்வாகிகள் தங்கவேலு, ஜான்கென்னடி, கிருபாகரன் ஜீவனாந்தம், ஜெயக்குமார், பாரதிவளன்அரசு, அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.