அனைத்து இளநிலை பட்ட மாணவர்களும் இனி சுற்றுச்சூழல் பாடம் படிப்பது கட்டாயம்: சென்னைப் பல்கலைக்கழகம் திட்டம்


அனைத்து இளநிலை பட்ட மாணவர்களும் சுற்றுச்சூழல் கல்வி குறித்து படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இதற்கேற்ப பாடத் திட்டத்தில் மாற்றம் செய்து வருவதுபோல, சென்னைப் பல்கலைக்கழகமும் அதன் கீழ் இயங்கி வரும் அனைத்து கல்லூரிகளிலும் வழங்கப்படும் அனைத்து இளநிலை பட்டப்படிப்புகளில் சுற்றுச்சூழல் குறித்த பாடத்தையும் சேர்ப்பதை நிகழ் கல்வியாண்டு முதல் கட்டாயமாக்க உள்ளது.


உலக வெப்பமயமாதல் காரணமாக, துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாகவும், இதனால் பூமியும், மனிதர்களும் பல்வேறு அபாயகரமான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் எனவும் உலக சுற்றுச்சூழல் அமைப்புகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தியாவும் இதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியன் அடிப்படையில், அனைத்து இளநிலை பட்டப் படிப்புகளிலும் சுற்றுச்சூழல் கல்வியைச் சேர்க்க பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) அறிவுறுத்தியது.

இதனடிப்படையில், அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சுற்றுச்சூழல் கல்வியைச் சேர்க்கும் வகையில் பாடத் திட்டத்தில் மாற்றம் செய்து வருகின்றன.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், அனைத்து இளநிலை பொறியியல் படிப்புகளிலும் சுற்றுச்சூழல் கல்வியையும் சேர்த்து புதிய பாடத் திட்டத்தை 2019-20-ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளது. அதேபோல, சென்னைப் பல்கலைக்கழகமும் இப்போது பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர உள்ளது.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி கூறியது:
சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே சில பட்டப் படிப்புகளில் சுற்றுச்சூழல் பாடத்தையும் சேர்த்துள்ளது. இப்போது யுஜிசி அறிவுறுத்தலின் அடிப்படையில் அனைத்து இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளின் பாடத் திட்டத்திலும் சுற்றுச்சூழல் கல்வி சேர்க்கப்பட உள்ளது.


நிகழ் கல்வியாண்டு முதல் இந்த புதிய பாடத் திட்டம் நடைமுறைக்கு வரும். இதை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அனைத்து கலை-அறிவியல் கல்லூரிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றார்.