அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க தலைமை ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு


திருவண்ணாமலை, மே 10: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார். தமிழகத்தில் கிராம ஊராட்சிகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டம் 2வது இடத்திலும், அரசு பள்ளிகள் அதிகம் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. எனவே, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான முயற்சியில் மாவட்ட கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.


அதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகளை சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாக அரசு பொதுத் தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் உயர்ந்து வருகிறது. மேலும்், நூறு சதவீத தேர்ச்சி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.


10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் 94.28 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 16வது இடத்தை பிடித்தது. அதேபோல், 118 அரசு பள்ளிகள், 2 நகராட்சி பள்ளிகள், 5 ஆதி திராவிடர் நலப்பள்ளிகள் உட்பட நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றன.
அதேபோல், பிளஸ் 1 அரசு பொதுத்தேர்விலும், அரசு பள்ளி மாணவர்கள் 91.31 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். மேலும், மாநில அளவில் 20வது இடத்தை பிடித்தது. இதைத்தொடர்ந்து, 11 அரசு பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சியை பெற்றன.


மேலும், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 83.97 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 23வது இடத்தை பிடித்தது. 3 அரசு பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றன. 23 அரசு பள்ளிகள் 95 சதவீதத்திற்கும் அதிகமான தேர்ச்சியை பெற்றன. எனவே, அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பதன் மூலம் பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர்கள் அடைந்துள்ள தனித்திறன், செய்துள்ள சாதனைகளை பொதுமக்களிடம் தெரிவித்து மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும், அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும், தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்யவும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் படிப்பை கைவிடாமல் தொடர்ந்து உயர் கல்வி படிப்பதற்கான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்ய வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.