குழந்தைகளை பள்ளியில் சேர்க்க கட்டாயமானது ஆதார் புகைப்படம் எடுக்க பெற்றோர்கள் படையெடுப்பு ஆட்கள் பற்றாக்குறையால் திணறும் கலெக்டர் ஆபீஸ்

குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆதார் அட்டை பெறுவதற்காக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மையத்திற்கு பெற்றோர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
மத்திய அரசு கடந்த 2014ல் தேசிய அளவில் மக்களுக்கு 12 இலக்கம் கொண்ட அடையாள எண் வழங்க முடிவு செய்து, இதற்காக முன்பு 6 வயதுக்கு மேற்பட்டோரின் புகைப்படம், கண்விழி, கைவிரல் ரேகை ஆகியவற்றுடன் அவர்கள் பெயர், முகவரி, வயது ஆகியவை பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து 12 இலக்கம் கொண்ட ஆதார் எண் வழங்கி அதற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இதனை மத்திய, மாநில அரசுகள் கட்டாயமாக்கியதும் அரசு தொடர்பான சலுகை பெறவும், மற்றும் அரசு ஆவணங்களில் பெறுதல் தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் தங்களுடைய ஆதார் எண் கட்டாயம் கொடுக்க வேண்டியுள்ளது. தற்போது, பிறந்த 6 மாத குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. முதலில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளும் தங்களது ஆதார் எண்ணை கொடுத்தால்தான், இறுதி தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இதனால் அனைவரும் ஆதார் எண் பெற்று வந்தனர்.


தற்போது பள்ளிகளில் பிரிகேஜி, எல்கே.ஜியில் சேர்க்கவும் ஆதார் எண் கொடுக்க பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தி வாங்கி வருகிறது. இதனால் இதுவரை குழந்தைகளுக்கு ஆதார் எடுக்காதவர்கள் தற்போது கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் உள்ள ஆதார் மையத்தில் குழந்தைகளை அழைத்து வந்து புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தில் தற்போது தினமும் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் வந்து குழந்தைகளின் படம், கண் ஆகியவற்றை பதிவு செய்து செல்கின்றனர். ஆதார் மையத்தில் 2 பேர் பணியாற்ற வேண்டும். ஆனால் ஒருவர் மட்டும் படம் எடுப்பதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டியுள்ளது.
இதுகுறித்து மதுரை கே.கே.நகர் சந்தியா கூறும்போது, 'எனது மகள் வித்யாவை பள்ளியில் சேர்க்க சென்ற போது, குழந்தையின் ஆதார் எண்ணை நிர்வாகம் கேட்டது.

இதனால், கலெக்டர் அலுவலகத்திற்கு காலையில் 9.30 மணிக்கு வந்தேன். தற்போது மதியம் ஒரு மணிக்குதான் குழந்தையின் படம், கண்விழியை பதிவு செய்துள்ளேன். அதற்கான ரசீது கொடுத்துள்ளனர். ஆதார் கார்டு 2 வாரத்தில் வந்துவிடும் என கூறியுள்ளனர். தற்போது பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் நேரம் இது. எனவே, ஆதார் மையத்தில் கூடுதல் ஆட்களை நியமித்து பணியாற்ற வேண்டும்'' என்றார்.