தகுதி இருக்கா? இல்லையா? நீட் எழுதிய மாணவருக்கு முரண்பட்ட மருத்துவச்சான்று: மீண்டும் பரிசோதனை செய்ய உத்தரவு

நீட் தேர்வு எழுதிய மாணவருக்கு முரண்பட்ட மருத்துவ சான்றுகள் அளித்துள்ளதால், மீண்டும் புதிதாக மெடிக்கல் போர்டு அமைத்து பரிசோதிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த அருண்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மருத்துவ படிப்பில் சேர 2018ல் நீட் தேர்வு எழுதினேன். மாற்றுத்திறனாளிகளுக்குரிய இடஒதுக்கீட்டின் கீழ் அரசு கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் ஒதுக்க வேண்டும். ஆனால், மருத்துவ படிப்பிற்கு தகுதியற்றவர் என மதுரை அரசு மருத்துவமனையின் மாவட்ட மருத்துவக்குழு தலைவர் (மெடிக்கல் போர்டு) 2018, ஜூன் 19ல் எனக்கு சான்றளித்தார். அதனை ரத்து செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.


விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘மனுதாரர் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்குரிய இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பிற்கு இடம் ஒதுக்க விண்ணப்பித்துள்ளார். அது நிராகரிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் மருத்துவ படிப்பில் சேர தகுதியற்றவர் என மதுரை மாவட்ட மெடிக்கல் போர்டு சான்றளித்துள்ளது. ஆனால், மனுதாரர் மருத்துவ படிப்பில் சேர தகுதியானவர் என சென்னை மருத்துவக்கல்லூரி மண்டல மெடிக்கல் போர்டு, 2018 ஜூன் 8ல் சான்றளித்துள்ளது.


இரு முரண்பட்ட சான்றுகளை மெடிக்கல் போர்டுகள் அளித்துள்ளன. மனுதாரரிடம் புதிதாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வரும் கல்வியாண்டில் சேர மனுதாரருக்கு தகுதிச்சான்று வழங்குவது குறித்து பரிசோதிக்க, புதிதாக மெடிக்கல் போர்டை, மருத்துவ கல்வி இயக்குனர் அமைக்க வேண்டும். இதை நான்கு வாரங்களில் முடிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் மெடிக்கல் போர்டு முடிவெடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.