பாடத் திட்டம், நுழைவுத் தேர்வு, வேலைவாய்ப்பு என பல வகையிலும் அச்சுறுத்தும் அறிவியல் பிரிவு... கவரும் கலைப் பிரிவு!- கஷ்டப்பட்டு படிப்பதை விரும்பாத மாணவ, மாணவிகள்


மேல்நிலை வகுப்புகளின் கடின மான பாடத் திட்டங்கள், நுழைவுத் தேர்வுக்கு கஷ்டப்பட்டு படிக்க வேண்டிய சூழ்நிலை மட்டுமின்றி, இந்த ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் காரணமாக, பிளஸ் 1 அறிவியல் பிரிவில் மாணவர் சேர்க்கை பெரிதும் குறைவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழக சமச்சீர் பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.


இதில், 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் கடந்த ஆண்டுகளைவிட அதிகம் என்றாலும், அதிக மதிப் பெண் எடுத்தவர்கள் மற்றும் பாடவாரியாக சென்டம் பெற்றவர் கள் எண்ணிக்கை கடந்த ஆண்டு களைவிடச் சரிந்துள்ளது. தேர்ச்சி பெற்றதில் 17 சதவீத மாணவர்கள் மட்டுமே 400-க்கு அதிகமாக மதிப்பெண் பெற்றுள்ள னர். 30 சதவீதம் பேர் 300-400 வரையும், 53 சதவீதம் பேர் 300-க் கும் குறைவாகவும் மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதம், அறிவியல் பாடங்களில் 250-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர். மொழிப் பாடங்களில் ஒருவர்கூட சென்டம் பெறவில்லை. .
தேர்வு எளிதாக இருந்ததால் சமூக அறிவியலில் 12 ஆயிரம் பேர் வரை நூற்றுக்கு நூறு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், பிளஸ் 1 மாண வர் சேர்க்கை வேகம் எடுத்துள்ளது. பெரும்பாலான மாணவர்கள் வணிகம், வரலாறு உள்ளிட்ட கலைப் பிரிவுகளையே தேர்வு செய்து வருகின்றனர். அறிவியல் பிரிவில் மாணவர் சேர்க்கை பெரி தும் குறைந்துள்ளதாக கூறப்படு கிறது. இதுகுறித்து இத்துறை வல்லுநர்கள் கூறியதாவது: பட்டதாரி ஆசிரியர் ஹரிஹரன்: பொதுவாகவே, தற்போதைய பதின்ம வயது மாணவர்கள் கஷ்டப் பட்டு படிப்பதை விரும்புவது இல்லை. ப்ளூ பிரின்ட் இல்லாததால் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு மாணவர்கள் பாடத்தின் எல்லா பகுதிகளையும் படிக்க நேரிட்டது.


ஆனாலும், பலருக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை. இதனால், மனதளவில் மாணவர்கள் சோர்ந்துள்ளனர். இந்த நிலையில், பல்வேறு தனியார் பயிற்சி மையங்களும் மாணவர்களின் செல்போன் எண்களை முறைகேடாக பெற்று தொடர்ந்து பல்வேறு விளம்பர அழைப்புகளை அனுப்புகின்றன. 'நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகள் கடினமாக இருக்கும். அதற்கு இப்போதே பயிற்சியை தொடங்க வேண்டும். சிறப்பு வகுப்பில் விரைவாக சேர்ந்தால் கட்டண சலுகை உண்டு' என்பது போன்ற குறுந்தகவல்களை அனுப்பி தொல்லை தருகின்றன. இத்தகைய சூழலில், 'பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் கடின மாக இருக்கும் என்பதால் டியூ ஷன் செல்ல வேண்டும்.


மேல் நிலை வகுப்புகளில் பொதுத் தேர்வு எழுத வேண்டும். பிறகு உயர்கல்விக்கு செல்ல நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். எனவே, அறிவியல் பிரிவில் சேர்ந்தால் 2 ஆண்டுகள் சிரமப்பட வேண்டும்' என்ற எண்ணமே பெரும்பாலான பிள்ளைகளிடம் உள்ளது. இது தவிர, பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற கருத்தும் உருவாகிவிட்டது. இதனால், அறிவியல் பிரிவு என்றாலே மாணவர்கள் பயப்படும் நிலை காணப்படுகிறது. இதுபோன்ற சிக்கல்கள் கலைப் பிரிவு படிப்புகளில் இல்லை என்ற எண்ணத்துடன், அதை மாணவர் கள் நாடிச் செல்கின்றனர். வேலை வாய்ப்பு குறித்த அச்சுறுத்தலும் உள்ளதால் பாலிடெக்னிக் படிப்பு களை நோக்கி செல்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
எனவே, தனியார் மையங்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் மாணவர்களை அச்சுறுத்தாமல், அறிவியல் பிரிவில் சேர்வதால் கிடைக்கக்கூடிய பலன்கள், வேலைவாய்ப்புகள் குறித்து எடுத்துக்கூறி வழிகாட்ட வேண்டும்.


தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில செயலாளர் கே.வரத ராஜன்:

நீட் தேர்வு, கடின பாடத்திட் டம் உள்ளிட்ட காரணங்களால், அறிவியல் பிரிவில் சேர மாண வர்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது. அதிலும், கணிதம் - உயிரியல் பிரிவில் சொற்ப மாணவர்களே சேர்கின்றனர். அறிவியல் பிரிவில் மாணவர் சேர்க்கைக்கான கட்ஆஃப் மதிப் பெண் சரிந்துள்ளது. தனியார் பள்ளிகளில், 425 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களும், அரசு உதவி பள்ளிகளில், 380 - 400 பெற்றவர்களும், அரசுப் பள்ளிக ளில், 350 வரை மதிப்பெண் பெற்றவர்களும் சேர்க்கப்படுகின்றனர்.
கிராமப்புற அரசுப் பள்ளி களில், 320 மதிப்பெண் எடுத்தவர் கள்கூட அறிவியல் பிரிவில் சேர்க் கப்படுகின்றனர். விதிகளின்படி ஒரு வகுப்பை நடத்த குறைந்தது 15 மாணவர் இருக்க வேண்டும். மாணவர் எண் ணிக்கை குறைந்தால், பல பள்ளிகளில், அறிவியல் பிரிவுகளை ஒரே வகுப்பாக சேர்க்க வேண்டிய நிலை ஏற்படும். மேல்நிலை வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் சிறப்பாக இருந் தாலும் பாடச்சுமை அதிகம் உள்ளது.


கணிதம், அறிவியல் பாடப் புத்தகங் கள் பட்டப்படிப்பு போல கடின மாக, 800 பக்கங்களுக்கு மேல் இருப்பதால், மாணவர்களுக்கு புரியவைக்க கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. மொத்தம் 4,400 பக்கங்கள் வரை படிப்பதற்கு மாண வர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். மாணவர்கள் கலைப் பிரிவை நோக்கிச் செல்ல இதுவும் முக்கிய காரணம். அறிவியல் பிரிவின் பாடத்திட்டத்தை குறைத்து, எளிமையாக்கினால் மட்டுமே இதைத் தவிர்க்க முடியும்.

குறையும் அறிவியல் ஆர்வம்:

தமிழகம் முழுவதும் பிளஸ் 1 அறிவியல் பிரிவில் 2017-18 கல்வி ஆண்டில் 2.60 லட்சம் மாணவர்கள் இருந்தனர். 2018-19ல் இந்த எண்ணிக்கை 2 லட்சமாக, அதாவது, 30 சதவீதம் குறைந்தது. இதேபோல, கணினி அறிவியல் பிரிவில் 10 சதவீதம், தொழிற்கல்வியில் 5 சதவீதம் சரிந்துள்ளது. 2019-20 கல்வி ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் குறையும் என்று தெரிகிறது. வணிகப் பிரிவில் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 12 - 15 சதவீதம் வரை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.