Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 2, 2019

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: தனித்தேர்வர்கள் இன்றும், நாளையும் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்களில் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி: தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகள் ஜுன் 14ஆம் தேதி முதல் ஜுன் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்தத் தேர்வுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு தற்போது தத்கலில் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.


தத்கலில் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பத்தையும் பக்கம் 1 முதல் 3 வரையுள்ள அறிவுரைகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் தேர்வரின் தகுதி, அறிவுரைகளையும் பின்பற்றி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கெனவே தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகலினை இணைக்க வேண்டும். இதையடுத்து தேர்வர் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் இன்றும் (மே 2), நாளையும் (மே 3) தேர்வரே நேரில் அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்வுக் கட்டணத்துடன் சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000 ம் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.


கட்டண விவரம்: ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, மதிப்பெண் சான்றிதழ் (முதலாம் ஆண்டு) ரூ.100, மதிப்பெண் சான்றிதழ் (இரண்டாம் ஆண்டு) ரூ.100, சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.1,000, பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை மே 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தத்கலில் விண்ணப்பிக்கும் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.