அரசு ஊழியர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டுகளை உடனடியாக அனுப்ப வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டுகளை உடனடியாக அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் அந்தக் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற செயற்குழுக்கூட்டத்தில் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் அக் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.


அதில், தேர்தலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்பதால் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் அஞ்சலில் வாக்களிக்கும் சீட்டுகள் இதுவரை அனுப்பப்படவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எனவே, இனியும் தாமதிக்காமல் உடனடியாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டுகள் அனுப்புவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களை குறைக்கும் எந்த பரிந்துரையையும் தமிழக அரசு ஏற்கக்கூடாது. தமிழகத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.