ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) நடத்தும் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது.
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் நடத்தும் பத்தாம் வகுப்பு (ஐசிஎஸ்இ ) பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 22 முதல் மார்ச் 25 வரை நடைபெற்றது. பிளஸ் 2 ( ஐஎஸ்சி) பொதுத்தேர்வு பிப்ரவரி 4 முதல் மார்ச் 25 வரை நடைபெற்றது. ஐசிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வை 2,247 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 96 ஆயிரத்து 271 மாணவ, மாணவியரும், ஐஎஸ்சி பிளஸ் 2 தேர்வை 86,713 மாணவ, மாணவியரும் எழுதினர்.இந்தநிலையில் இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள் www.cisce.org இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியானது.

இதில் பிளஸ் 2 வகுப்பில் 96.52 சதவீதம் பேரும், பத்தாம் வகுப்பில் 98.54 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 83 ஐசிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த 3,831 மாணவ, மாணவியர் தேர்வெழுதியதில் 99.79 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7 மாணவர்களும், ஒரு மாணவியும் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
அதே போன்று பிளஸ் 2 தேர்வை 49 ஐஎஸ்சி பள்ளிகளைச் சேர்ந்த 1,646 மாணவ, மாணவியர் எழுதியதில் 99.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வில் 7 மாணவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர்.