கத்திரி வெயில் தாக்கத்தை சமாளிப்பது எப்படி?


கத்திரி வெயில் தாக்கத்தை சமாளிப்பது எப்படி என்பது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் விளக்கம் அளித்துள்ளார்.
புதுவையில் தற்போது கத்திரி வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதன் காரணமாக, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படையும் சூழல் உள்ளது.
இத்தகைய வெப்ப தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில், புதுவை மாவட்ட நிர்வாகம், மக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தியுள்ளது.


செய்யக் கூடியவைகள்: வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் வாயிலாக தெரிவிக்கப்படும் உள்ளூர் வானிலை முன் அறிவிப்பின் மூலம் வெப்ப தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதா என தெரிந்துகொள்ள வேண்டும். தாகமாய் இருந்தாலும், இல்லாவிட்டாலும் போதிய குடிநீரை அவ்வப்போது பருக வேண்டும்.
எடை குறைந்த, வெளிறிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும்போது, பாதுகாப்பு கண்ணாடிகள், குடை, தொப்பி, காலணிகளை பயன்படுத்த வேண்டும். வெளியிடங்களில் வேலை செய்யும்போது, குடை அல்லது தொப்பி அணிய வேண்டும். தலை, கழுத்து, முகம், கை, கால்களை ஈரத்துணியினால் மூடிக்கொள்ள வேண்டும்.
புத்துணர்ச்சி தரக்கூடிய உப்புக்கரைசல்கள், இளநீர், பழங்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்ஸி, கஞ்சி, எலுமிச்சைச்சாறு, மோர் உள்ளிட்டவற்றை உள்கொள்ள வேண்டும். மயக்கம், இதர உடல் உபாதைகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.


கால்நடைகளை நிழலான பகுதிகளில் தங்க வைத்து, குடிப்பதற்கு போதிய குடிநீர் வழங்கவும். வீட்டை திரைச்சீலைகள், மின் விசிறிகள், கொட்டகைகள் பயன்படுத்தி போதிய அளவு குளிர்ந்ததாக வைத்திருக்க வேண்டும். அடிக்கடி குளிர்ந்த நீரால் குளிக்க வேண்டும். கர்ப்பிணிகள், மருத்துவக் கண்காணிப்பில் உள்ளவர்களின் மீது தனிக் கவனம் செலுத்துவது நல்லது.
செய்யக் கூடாதவைகள்: பகல் 12 முதல் 3 மணி வரையிலான நேரத்தில் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தின் உள்ளே குழந்தைகளையோ, செல்லப்பிராணிகளையோ விட்டுச் செல்ல வேண்டாம்.


வெயிலின் தாக்கம் அதிகமான நேரங்களில் கடினமான வேலைகளை செய்வதை தவிர்க்க வேண்டும். மது, தேநீர், காபி, கார்பன் ஏற்றப்பட்ட பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும். உலர்ந்த, கெட்டியான மற்றும் புரத சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் இந்திய வானிலை ஆய்வுத் துறை வழங்கும் ஆலோசனைகளை தொடர்ந்து கண்காணித்து, பாதகமான சூழ்நிலைக்கு ஏற்றவாறு தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


பொதுமக்கள் இது தொடர்பான விவரங்களை கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1070, 1077 தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். மேலும், தீயணைப்புத் துறை புகார்களுக்கு 101, மின் துறை புகார்களுக்கு 1912, அவசர கால ஊர்திக்கு 108 என்ற எண்களை பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ஆட்சியர் அருண்.