புணர்ச்சி - TNPSC, TET, TRB, NET, SET, GROUP 1-8 STUDY MATERIALS.

புணர்ச்சி

இரண்டு சொற்கள் ஒன்றோடு ஒன்று இணைவதனைப் புணர்ச்சி என்பர். இப்புணர்ச்சி, இயல்புப் புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி, என இரண்டு வகைப்படும்.

இப்புணர்ச்சியின் போது முதலில் உள்ள சொல் நிலைமொழி என்றும் வந்து இணையும் சொல்லை வருமொழி என்றும் கூறுவர். 

இயல்புப் புணர்ச்சி

நிலைமொழியும் வருமொழியும் சேரும்போது எவ்விதமாற்றமும் ஏற்படவில்லை என்றால், அது இயல்புப்புணர்ச்சி எனப்படும்

(எ.கா.)

வாழை + மரம் = வாழைமரம்
பொன் + வளையல் = பொன்வளையல், 
மலர் + மாலை = மலர்மாலை.
பனை + மரம் = பனைமரம்


விகாரப்புணர்ச்சி :

நிலைமொழியும் வருமொழியும் சேரும்போது மாற்றங்கள் ஏற்படுமானால் அதனை விகாரப்புணர்ச்சி என்பர்.

இவ்விகாரப்புணர்ச்சி தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும்.

தோன்றல் விகாரப் புணர்ச்சி 

நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது நிலைமொழியின் ஈற்றில் புதிதாக ஓர் எழுத்துத் தோன்றுவது தோன்றல் விகாரப் புணர்ச்சி எனப்படும்.

எ.கா. திரு + குறள் = திருக்குறள் (க்)

திரிதல் விகாரப் புணர்ச்சி

நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது நிலைமொழி ஈற்றில் உள்ள ஓர் எழுத்து வேறொரு எழுத்தாக மாறுவது திரிதல் விகாரப் புணர்ச்சி எனப்படும்.

எ.கா., பல் + பொடி = பற்பொடி (ற்)

கெடுதல் விகாரப் புணர்ச்சி

நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது நிலைமொழி ஈற்றில் உள்ள ஓர் எழுத்து மறைந்து விடுவது(கெடுவது) கெடுதல் விகாரப் புணர்ச்சி எனப்படும்.

எ.கா. மரம் + வேர் = மரவேர் (ம்)


மேலும் இப்புணர்ச்சி, உயிரீற்றுப் புணர்ச்சி, மெய்யீற்றுப் புணர்ச்சி, உடம்படுமெய்ப் புணர்ச்சி, வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி, குற்றியலுகரப் புணர்ச்சி, திசைப்பெயர்ப் புணர்ச்சி, மகர ஈற்றுப் புணர்ச்சி, எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி, பூப்பெயர்ப் புணர்ச்சி எனப் பலவகைப்படும். அவற்றை அடுத்த இலக்கணப்பகுதியில் காண்போம்.