Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 4, 2019

நீட் தேர்வுக்குத் தயாராவது எப்படி? A டு Z டிப்ஸ்!


எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான, நீட் தேர்வு, வரும் 5-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. 1.40 லட்சம் தமிழக மாணவர்கள் உட்பட, இந்தியா முழுவதும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். 3 மணி நேர கால அளவைக்கொண்ட இந்தத் தேர்வில், இயற்பியலில் 45 வினாக்கள், வேதியியலில் 45 வினாக்கள், உயிரியலில் (தாவரவியல், விலங்கியல்) 90 வினாக்கள் என மொத்தம் 180 வினாக்கள் இடம்பெறும்.


சரியான விடையைத் தேர்வு செய்யும் கொள்குறி வழியிலான இந்தத் தேர்வில், மொத்த மதிப்பெண்கள் 720. ஒரு சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் வினாத்தாள் இருக்கும்.
* தேர்வு குறித்த அச்சத்தையும் பதற்றத்தையும் முதலில் தவிர்க்க வேண்டும். குழப்பம், கவனச் சிதறல்களின்றி இதுவரை படித்த அனைத்தையும் மீள்பார்வை செய்துகொண்டு தெளிவான மனநிலையில் இருங்கள்.
* பள்ளிகளில் நடைபெறும் தேர்வு என்பது பாடங்களை முழுமையாகப் படித்திருக்கிறார்களா என்று சோதிக்கும் வகையில் அமையும். நுழைவுத் தேர்வு என்பது பாடத்திட்டத்தை முழுவதும் அறிந்து, புரிந்து வைத்திருக்கிறார்களா என்று சோதிக்கும் வகையில் இருக்கும். பாடங்களின் கோட்பாடுகள், காரண காரியங்கள் (Reasoning ) பாடம் சார்ந்த ஆழமான அறிவு, பாடம் தொடர்பான பிரதியீடுகள் இவையெல்லாம் மாணவர்களுக்குத் தெரிகிறதா என்று எடை போடுவதுபோல அமைந்திருக்கும். அதற்கேற்ப மாணவர்கள் தங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.


* இயற்பியல் சம்பந்தமாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்படி விடையளிப்பது என்று பார்க்கலாம். நீட் பாடத்திட்டத்தில் உள்ள XI, XII பாடங்களை எடுத்து, அதில் உள்ள வரையறைகள், சூத்திரங்கள், கோட்பாடுகள், கணக்குகள் இவற்றை முழுவதும் குழப்பமில்லாமல் திருப்பிப் பார்க்க வேண்டும். இயற்பியலைப் பொறுத்தவரை, கோட்பாடுகளும், அவை சார்ந்த கணக்குகளும், திறனறி வினாக்களும், ரீசனிங் (Reasoning) வினாக்களும் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியவை.
அனைத்துப் பாடங்களையும் படிக்க வேண்டும். அதேநேரத்தில் இயக்கம், இயக்க விதிகள், (Laws of Motion), வேலை, திறன், ஆற்றல் புவியீர்ப்பு நிலை, மின்னாற்றல், மின்காந்தத் தூண்டல் மாறும் மின்னூட்ட ஒளியியல் (Ray and Wave optics) கதிர்வீச்சு, பொருள் இருதன்மை போன்ற தலைப்புகளில் அதிக கவனம் செலுத்துவதுடன் இவற்றில் வரும் கணக்குகளை நன்றாகப் பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.


* வேதியியலைப் பொறுத்தவரை, சமன்பாடுகள், வேதிப்பொருள்களின் பயன்பாடுகள், கூட்டுப்பொருள்களின் தன்மைகள், வடிவ சூத்திரங்கள், ஒரு பொருளிலிருந்து மற்ற வேதிப்பொருளைப் பெறுதலுக்கான சமன்பாடுகள், பெயர் வினைகள், கணக்குகள், அன்றாட வேதியியல் பயன்பாடுகள், வேதிப் பொருள்கள் தயாரிப்பு போன்ற பாடங்களை நன்றாக மீள்பார்வை செய்துகொள்ள வேண்டும்.
வேதியியல் பாடத்தைப் பொறுத்தவரை, நிறைய குறிப்புகளை நினைவில் நிறுத்த வேண்டிய தேவை இருப்பதால் மீண்டும் மீண்டும் கவனத்துடன் பாடங்கள் அனைத்தையும் முழுமையாகப் படிப்பது நல்லது. அணு அமைப்பு, தனிமை அட்டவணை, வெப்ப இயக்கவியல், ரெடாக்ஸ் விசைகள், சுற்றுப்புற வேதியியல், மின் வேதியியல், வேதி இயக்கவியல், சகபிணைப்பு கூட்டுப்பொருள், கரிம வேதியியல், உயிர் மூலக்கூறுகள் போன்ற பாடங்களிலும் மிகவும் கவனம் தேவை.
* இயற்பியல், வேதியியலில் செய்முறை தொடர்பான பாடங்களையும் படித்து வைத்துக்கொள்ளுங்கள்.


* உயிரியல், மிக எளிதாக மதிப்பெண் பெற வாய்ப்புள்ள பகுதி. பாடங்களை முழுமையாக உள்வாங்கி நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். சுற்றுச்சூழல் பிரச்னைகள் தொடர்பான பாடங்களில் அதிக கவனம் வேண்டும். மனித உடலியல் சம்பந்தமாக முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

எளிதாக மதிப்பெண்கள் பெற வழிகள்!

* முதலில் உறுதியாக விடை தெரிந்த வினாக்களைத் தேர்வுசெய்து விடையளிக்க வேண்டும். தெரியாத வினாக்களில் கவனம் செலுத்தி நேரத்தை வீணடிக்கக் கூடாது. அவற்றை இறுதியில் முயற்சி செய்து பார்க்கலாம்.

* விடை தெரியவே தெரியாத கேள்விகளுக்கு , விடையளிக்காமல் இருப்பதே நல்லது. அதன் மூலம் நெகட்டிவ் மதிப்பெண் இழப்பைத் தவிர்க்கலாம்.
* கடினமான வினாக்களைப் பொறுத்தவரை, கொடுக்கப்பட்ட விடைகளில் எது சரி என்று கண்டறிவதைவிட, எவையெல்லாம் தவறு என்று கண்டறியும் (Elimination) முறையைக் கடைப்பிடிக்கலாம்.


* தெளிவான மனநிலையில் தேர்வுக்குச் செல்ல வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் மனதை அலைபாய விடக்கூடாது. வீணான குழப்பங்களுக்குள் சிக்கிக்கொள்ளக் கூடாது. அப்போதுதான், படித்த பாடங்கள் நினைவில் நிற்கும்.
* தேர்வுக்கு இரண்டு நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஏற்கெனவே படித்ததை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பது மட்டுமே. புதிதாகப் படித்து குழப்பிப்கொள்ளக் கூடாது.
* மாதிரி வினாத்தாள்களையும், கடந்த ஆண்டு வினாத்தாள்களையும் எடுத்து அதில் இருக்கின்ற கேள்விகளுக்கு விடையளித்துப் பார்க்கலாம். அதோடு, பயிற்சி ஆசிரியர்கள் கொடுத்த குறிப்புகள், வினாத்தாள்களை எடுத்து பயிற்சி மேற்கொள்ளலாம்.


* விடைத்தாளின் முகப்பில் குறிப்பிட்டுள்ள பக்கங்கள், வினாத் தொகுப்பில் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். சரியாக இல்லையென்றால் உடன் கண்காணிப்பாளரிடம் தெரியப்படுத்த வேண்டும். அதேபோல் வினாத்தாளில் உள்ள குறியீடும், விடைத்தாளில் உள்ள குறியீடும் ஒன்றாக உள்ளதா என்பதையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

கவனம்:

* 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நேரம். 5 மணிக்குப் பின்தான் அறையைவிட்டு வெளியேற வேண்டும்.

* மொபைல், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்தக் கருவிகளையும் எடுத்துச்செல்லக் கூடாது.



* கடிகாரம், கைப்பை, கேமரா, காதணிகள், வளையல் உள்ளிட்ட ஆபரணங்கள் எதையும் அணியக் கூடாது. பால்பாய்ன்ட் பேனா தேர்வு மையத்தில் தரப்படும்.

* அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். முழுக்கைச் சட்டையை அனுமதிக்க மாட்டார்கள். ஷூ அணியக் கூடாது. ஹை ஹீல்ஸ் அனுமதி இல்லை. செருப்பு மட்டுமே அணிய வேண்டும். ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், நம்பிக்கையோடு தேர்வுக்குச் செல்ல வேண்டும். மருத்துவப் படிப்புக்கு, நீட் மதிப்பெண் மட்டுமே கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

எதிர்கால மருத்துவர்களுக்கு வாழ்த்துகள்!