10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு உதவித்தொகை வேணுமா?


திண்டுக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்புகள் படித்து கடந்த 5 ஆண்டுகளாக வேலை இல்லாமல் இருப்பவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உதவித்தொகைக்கு வரும் ஆக.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது, 'திண்டுக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தோல்வியுற்றவர்கள், பிளஸ் 2, பட்டபடிப்பு படித்தவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக வேலை இல்லாமல் இருந்தால் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கலாம்.


ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், பிற பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தோல்வியுற்றவர்களுக்கு ரூ.200 மாத உதவித்தொகையாகவும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300ம், பிளஸ் 2 தேர்வு பெற்றவர்களுக்கு ரூ.400ம், பட்டதாரிகளுக்கு ரூ.600ம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் ஓராண்டு வேலையில்லாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பிற்கு ரூ.400ம், பிளஸ் 2விற்கு ரூ.750ம், பட்டபடிப்பிற்கு ரூ.ஆயிரமும் வழங்கப்படும். இந்த உதவித்தொகை பெறுபவர்கள் தனியார், மாநில அரசுகளில் பணியாற்றக்கூடாது. பள்ளி, கல்லூரியில் படிக்க கூடாது. வங்கி கணக்கு, ஆதார் எண்ணுடன் இணைத்து வழங்க வேண்டும். வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

உதவித்தொகை பெறுவதற்கும், அரசு வேலை கிடைப்பதற்கும் சம்பந்தம் இல்லை. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த அட்டை, அனைத்து சான்றிதழ்களுடன் நேரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆக.31க்குள் வழங்க வேண்டும். ஜூன் 30க்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிந்து இருக்க வேண்டும். ஏற்கனவே உதவித்தொகை பெறுபவர்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அனைத்து சான்றிதழ்களுடன் வந்து விண்ணப்பம் வாங்கி புதுப்பிக்க வேண்டும். உதவித்தொகை விண்ணப்பதாரர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.