விண்ணப்பித்த 11 நாள்களில் கடவுச்சீட்டு: வெளியுறவு அமைச்சகம்


விண்ணப்பித்த 11 நாள்களில் மக்களுக்கு தற்போது கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அளிக்கப்படுவதாக இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வீ. முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்களவையில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சாதாரண சூழ்நிலைகளில் விண்ணப்பிக்கும் மக்களுக்கு பாஸ்போர்ட் அளிக்கப்படுவதற்கான கால அவகாசம் தற்போது குறைந்துள்ளது. அதாவது, வெறும் 11 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகிறது.
தட்கல் அடிப்படையில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் மக்களுக்கு ஓரிரு நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.
பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் மக்களின் விவரங்களை சரி பார்ப்பதற்கு, நாடு முழுவதும் 731 காவல் மாவட்டங்களில் செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தகவலை உறுதிப்படுத்தும் பணியில் ஏற்படும் காலதாமதம், ஊழல் ஆகியவை தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது என்றார் அவர்.


இதனிடையே, காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி குறுக்கிட்டு, பாஸ்போர்ட் பெறுவது ஏன் மக்களுக்கு கடினமாக உள்ளது? என கேள்வியெழுப்பினார். அதற்கு முரளிதரன் அளித்த பதிலில், நாட்டில் 36 பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன. இதுதவிர்த்து, 93 பாஸ்போர்ட் சேவா கேந்திரங்கள், 412 தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திரங்கள் உள்ளன' என்றார்.
இன்னொரு கேள்விக்கு முரளிதரன் பதிலளிக்கையில், தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திரங்களை நடத்தும் பொறுப்பு தனியாரிடம் வழங்கப்படவில்லை' என்றார்.