Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 13, 2019

வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை: முதல் கட்ட கலந்தாய்வு தொடக்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூலை 12) தொடங்கியது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்புக் கல்லூரிகள், 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு - ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 11 பட்டப் படிப்புககளில் உள்ள 3,905 இடங்களுக்கு 2019-20 -ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு 51,876 மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தனர்.
அவர்களில் 41,590 பேர்கள் உரிய கட்டணம் செலுத்தி, போதிய விவரங்களை சமர்ப்பித்திருந்தனர். பெறப்பட்ட விண்ணப்பப் படிவங்களைக் கொண்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் 26-ஆம் தேதி பட்டியல் வெளியிடப்பட்டது. இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு முதல் கட்ட ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 12-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்தே ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்றவர்களுக்கு கல்லூரி வாரியான பாடப் பிரிவு ஒதுக்கீடு ஜூலை 19-இல் நடைபெறும். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 23 முதல் 25 வரை நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு மட்டும் மாணவ-மாணவிகள் பல்கலைக்கழகத்துக்கு நேரில் வந்தால் போதுமானது என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறப்புப் பிரிவில் விளையாட்டு வீரர்களுக்கு 5 இடங்களும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு ஓர் இடமும், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு 8 இடங்களும், தொழிற்கல்வி பாடப் பிரிவினருக்கு 49 இடங்களும், மாற்றுத் திறனாளிகளுக்கு 67 இடங்களும் என 130 இடங்கள் உள்ளன.


இதற்காக விண்ணப்பித்தவர்களில் விளையாட்டுப் பிரிவுக்கு 20 மாணவர்களும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் இடத்துக்கு 4 பேரும், முன்னாள் படையினரின் ஒதுக்கீடுக்கு 20 பேரும், தொழிற்கல்வி பாடப் பிரிவில் 90 பேரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
அதேநேரம், மாற்றுத் திறனாளிகளில் 67 இடங்களுக்கு 46 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கான கலந்தாய்வு இரவு வரையிலும் நடைபெற்றது.
இதில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான ஓர் இடம், விளையாட்டு வீரர்களுக்கான 5 இடங்கள், தொழிற்கல்வி பாடப் பிரிவினருக்கான 49 இடங்களும் நிரம்பின.


மாற்றுத் திறனாளிகளுக்கான 67 இடங்களில் 41 இடங்கள், முன்னாள் ராணுவத்தினருக்கான 8 இடங்களில் 7 இடங்கள் என மொத்தம் 103 இடங்கள் நிரம்பின. இவர்களில் 46 பேர் பெண்கள், 57 பேர் ஆண்கள் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.