பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கும் பணி தீவிரம்

அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் ஸ்மார்ட் அட்டை' வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 70 லட்சம் மாணவர்களுக்கு வழங்குவதற்காக ரூ.12 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் மாணவர்களின் சுய விவரங்களைப் பதிவு செய்யும் வசதியுடன் திறன் அட்டைகள் (நம்ஹழ்ற் இஹழ்க்ள்) தயாரிக்கப்பட்டன. இந்தத் திட்டத்தை கடந்த ஜூன் 13-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்.


இதையடுத்து, தமிழகம் முழுவதும் 413 வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கும் ஸ்மார்ட் அட்டைகளை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு ஸ்மார்ட் அட்டை' கிடைக்க பெற்ற உடன் அடுத்த 24 மணி நேரத்தில் மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த அட்டையில் மாணவர்களின் புகைப்படம், ரத்த வகை, முகவரி, குடும்ப விவரம், ஆதார் எண் உள்பட பல்வேறு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் மாணவர்கள் பயிலும் பள்ளி, ஆசிரியர்கள் குறித்த விவரம் உள்ளிட்டவை குறித்தும் அறிந்து கொள்ளலாம்.