அரசு ஊழியர்களுக்கு மின்னஞ்சல்


தமிழக அரசு கேபிள் தொலைக்காட்சியில் ஏற்கெனவே உள்ள சேனல் தொகுப்புகளுடன் புதிதாக இரண்டு சேனல் தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் சட்டப்பேரவையில் புதன்கிழமை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழக அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தில் மூன்று தொகுப்புகள் வழியாக சேனல்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இப்போது பொதுமக்கள் கேபிள் தொலைக்காட்சி கட்டணத்தைக் குறைக்குமாறும், குறைந்த கட்டணத்தில் புதிய சேனல் தொகுப்புகளை கிராமப்புற மக்கள் விரும்பும் வகையில் அளிக்குமாறும் கோரிக்கைகள் வந்தன.அதன்படி, கிராமப்புற தொகுப்பு என்ற பெயரில் ரூ.170 கட்டணத்திலும் (வரி தனி), தமிழ்த் தொகுப்பு 180 என்ற பெயரில் 170 சேனல்கள் ரூ.180 கட்டணத்தில் (வரி தனி) அளிக்கப்படும்

மக்களுக்கான இணையதளம்:
அரசு அளிக்கும் சேவைகளை பொதுமக்கள் பல்வேறு இணையதளங்களின் மூலம் பெறுகின்றனர். இதைத் தவிர்க்க, ஒரே இணையதளத்தை உருவாக்க வேண்டிய அவசியமாகிறது. அதன்படி, உருவாக்கப்படும் இணையதளத்தில் பல்வேறு துறை சார்ந்த சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டு அளிக்கப்படும்.
இதேபோன்று, அரசின் அனைத்து சேவைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் ஒற்றை செல்லிடப்பேசி செயலி தோற்றுவிக்கப்படும்.அரசு ஊழியர்களுக்கு மின்னஞ்சல்:

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 10 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அனைத்துப் பணியாளர்களுக்கும் தேசிய தகவலியல் மையத்தின் உதவியுடன் தனிநபர் மற்றும் அலுவல் சார்ந்த மின்னஞ்சல் முகவரிகள் tn.gov.in என்ற தளப் பெயருடன் அளிக்கப்படும். மாநிலத் தரவு மையத்தில் உள்ள மேகக் கணினி அமைப்பானது தனிப்பட்ட அடையாளத்துடன் தமிழ் மேகம்' என்ற பெயரில் அறியப்படும் என்றார்.