ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பணி புரியும் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் விரைவு தகவல் குறியீடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் 4, 859 ஆசிரியர்கள் ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். வரும் கல்வியாண்டில் புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.முதற்கட்டமாக நோணாங்குப்பம், இந்திரா நகர், வில்லியனுார் பகுதிகளில் ஆசிரியர்களின் போட்டோ சரிபார்க்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக 8ம் தேதி முதல் பள்ளி கல்வித் துறை வளாகத்தில் போட்டோ எடுக்கப்பட்டது.இன்று (12ம் தேதி) காலை 8.30 மணி முதல் 1 மணி வரை ஜீவானந்தம் மேல்நிலைப்பள்ளியில் அன்னை சிவகாமி, கலவை கல்லுாரி, கதிர்காமம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உழவர்கரை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்குப்பம் மேல்நிலைப்பள்ளி, இந்திரா நகர் இந்திரா காந்தி மேல்நிலைப்பள்ளி, குயவர்பாளையம் மணிமேகலை பள்ளி, லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் மேல்நிலைப்பள்ளி, சுசிலா பாய் பெண்கள மேநிலைப்பள்ளி, சுப்ரமணிய பாரதியார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு புகைப்படம் எடுக்கப்பட உள்ளது.இந்த அடையாள அட்டையில் ஆசிரியரின் பெயர், பதவி, பிறந்த தேதி, பணியாளர் எண், ரத்த வகை, ஆதார் எண், மொபைல் எண், அவசர தொடர்பு எண், முகவரி உள்பட 13 வகையான தகவல்கள் இடம் பெற உள்ளது.

அத்துடன் பள்ளி கல்வித் துறை இயக்குனர் கையெழுத்தும் இடம் பெற உள்ளது.கியூ.ஆர். கோர்டு: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ள பி.வி.சி., அடையாள அட்டையில் விரைவு தகவல் குறியீடு (கியூ.ஆர் கோர்டு)இடம் பெற உள்ளது. இந்த குறியீடுகளை ஸ்கேன் செய்தால் ஆசிரியர்கள் பற்றிய அனைத்து விபரங்களும் தெரிந்து விடும்.