45 அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப் பிரிவுகள்: மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்த அறிவுறுத்தல்

தமிழகத்தில் 45 அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 81 பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்தி முடிக்குமாறு கல்லூரி கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 45 அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் கடந்த ஜூலை 2-ஆம் தேதியன்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான அரசாணை புதன்கிழமை பிறப்பிக்கப்பட்டது.
அதன் மூலம், சேலம், தருமபுரி, பாலக்கோடு, பேராவூரணி, சீர்காழி, திட்டமலை, அரியலூர், சத்தியமங்கலம், கிருஷ்ணகிரி, சிதம்பரம், ராமநாதபுரம், குளித்தலை, உடுமலைப்பேட்டை, உத்திரமேரூர், குமாரபாளையம், திருச்சி, வேப்பந்தட்டை, கரூர், உதகை, பரமக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 69 இளநிலை பாடப் பிரிவுகளும், 12 முதுநிலை பாடப் பிரிவுகளும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன.


இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் (பொறுப்பு) ஜோதி வெங்கடேஷ்வரன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு விவரம்:
புதிதாக பாடப் பிரிவுகள் வழங்கப்பட்டுள்ள 45 கல்லூரிகளும் அந்தப் பாடப் பிரிவுகளில் வரும் 31-ஆம் தேதிக்குள்ளாக மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும். ஏற்கெனவே, விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து இடம் கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் புதிதாக சேர விரும்பும் மாணவர்களுக்கு விண்ணப்பங்களை விநியோகித்தும் இந்த சேர்க்கையை உடனடியாக நடத்தி முடிக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சென்னையில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் வகிக்கும் தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உயர் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த புதிய பாடப் பிரிவுகள் 45 கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இளநிலை பட்டப் படிப்புகளில் 2,800 முதல் 3,000 மாணவர்களும், முதுநிலை பட்டப் படிப்புகளில் 300 முதல் 400 மாணவர்களும் கூடுதலாக இந்த ஆண்டில் சேர்க்கை பெறுவர் என்றார் அவர்.