அரசு பள்ளிகளை கண்காணிக்க கல்வித்துறை அவசர உத்தரவு - தலைமை ஆசிரியர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் உத்தரவு

அரசுப் பள்ளிமாணவர்கள் சாதி சின்னங்களை அணிந்து வருகிறார்களா என கண்காணிக்கும்படி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:கடந்த 2018ம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி பெற்ற அலுவலர்கள் அனுப்பிய கடிதத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் சிலர் கைகளில் கயிறுகள் மற்றும் ரப்பர் பேண்ட்டுகள் அணிந்துள்ளனர். அவை சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் காவி நிறங்களில் இருக்கின்றன. கைகளில் வளையங்கள் நெற்றியில் திலகங்கள் அணிந்திருக்கின்றனர் இவை சாதியை குறிப்பதாக தெரிகிறது
விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களை தேர்வு செய்யும் போது குறியீடுகள் மூலம் மாணவர்கள் எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதை அறிவிப்பதாக உள்ளது. வகுப்பறையிலும் உணவு இடைவேளைகளிலும் அவர்களை அடையாள படுத்துவதாக இருக்கிறது. இந்த செயல் மாணவர்கள் தங்களுக்குள் சாதியை அறிந்து கொள்ளவும் ஆசிரியர்கள் அறிந்து கொள்ளவும் பயன்படுத்துவதாகத் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளனர்.


எனவே, அனைத்து கல்வி அதிகாரிகளும் பள்ளிகளில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இதுபோன்ற சாதியை குறிக்கும் செயல்களில் அடையாளப்படுத்தும் செயல்களில் ஈடுபடுகிறார்களா? எனகண்காணிக்க வேண்டும். சாதி குறியீடுகளை வெளிப்படுத்தும் செயல்களை யாராவது மேற்கொண்டிருந்தால் அதுகுறித்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்து அதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி ஏதாவது நடந்தால் அதற்கு தலைமை ஆசிரியர்களே பொறுப்பு ஏற்க வேண்டும். இது சம்பந்தமான எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இணை இயக்குனருக்கு உடனடியாக மின்னஞ்சல் மூலம் தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு வெளியிட்ட உத்தரவில் கூறியிருந்தது.