விஐடி: ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் ஊதியம்: இதுவரை 2,200 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

இவ்வாண்டில் இதுவரை 2,200 மாணவ, மாணவிகளுக்கு முன்னணி நிறுவனங்களில் ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமான ஊதியம் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் பெற்றுத்தரப்பட்டுள்ளதாக விஐடி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2020-ஆம் ஆண்டு பட்டமேற்படிப்பு முடிக்கும் மாணவர்களுக்கான வளாக வேலைவாய்ப்பு நேர்காணல் விஐடியில் கடந்த மே 1-ஆம் தேதி தொடங்கியது. இதில், அமேசான், நெட் ஆப், இன்டெல், வி.எம். வேர், ஆரக்கிள், பிலிப்ஸ், கம்மின்ஸ், ரிலையன்ஸ் உள்பட இதுவரை 150 நிறுவனங்கள் வேலைவாய்ப்பு நேர்காணலை நடத்தின. இவற்றின்மூலம், எம்.டெக்., எம்சிஏ படிப்புகளில் இருந்து 788 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையிலான மாதாந்திர உதவித்தொகையுடன் ஆகஸ்ட் முதல் 10 மாதங்கள் வரை பணிப் பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.

பணிப் பயிற்சிக் காலத்துக்குப் பிறகு முழுநேர ஊழியராகும் இவர்களுக்கு தொடக்க ஊதியமாக ஆண்டுக்கு ரூ. 5 லட்சமும், அதற்கு மேலும் கிடைக்க உள்ளது.
இதேபோல், விஐடியில் 2020-ஆம் ஆண்டில் பட்டப்படிப்பு முடிக்கும் மாணவர்களுக்கான வளாக வேலைவாய்ப்பு நேர்காணல் கடந்த ஜூலை 3-ஆவது வாரத்தில் தொடங்கியது.
முதல்கட்ட வளாக வேலைவாய்ப்புக்காக அழைக்கப்பட்டிருந்த சூப்பர் ட்ரீம் நிறுவனங்களான அமேசான் 17, பே பால் 3, சிஸ்கோ 21, டி ஷா 2, மைக்ரோசாப்ட் 7 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளன. இந்த நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ. 25 லட்சம் முதல் ரூ. 41.6 லட்சம் வரை ஊதியம் அளிக்கக்கூடியவையாகும். மேலும், இதுவரை 92 சூப்பர் ட்ரீம் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு நேர்காணலை நடத்தியுள்ளன.


இதேபோல், பொறியியல், தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளுக்கான நேர்காணலும் நடந்து வருகின்றன. இவற்றில் ஸ்க்லம்பெர்கர், பஜாஜ் ஆட்டோ, எல் அண்ட் டி கன்ஸ்ட்ரக்க்ஷன், வேலியோ, என்எக்ஸ்பி செமி கன்டக்டர், கம்மின்ஸ், வர்ரோக், வால்டெக், ஃபெசிலியோ, ஷாபூர்ஜி, ஹூண்டாய் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் முக்கியமானவை.
இவைதவிர, ஆலோசனை நிறுவனங்கள், பகுப்பாய்வு நிறுவனங்கள், வங்கிகள் போன்றவையும் வேலைவாய்ப்பு நேர்காணலை நடத்தியுள்ளன. பாங்க் ஆஃப் அமெரிக்கா, ஸ்டேட் ஸ்ட்ரீட் ஆகியவை வரும் மாதங்களில் நேர்காணலை நடத்த உள்ளன.
அதன்படி, விஐடியில் இவ்வாண்டு இதுவரை நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு நேர்காணல்களில் 245 நிறுவனங்கள் பங்கேற்று 2,200 மாணவ, மாணவிகள் சர்வதேச முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு நடந்த வேலைவாய்ப்பு நேர்காணல்களில் 719 நிறுவனங்கள் பங்கேற்று 4,397 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கின. இதில், மைக்ரோசாப்ட் நிறுவனம் 2019-இல் பட்டப்படிப்பு முடித்த 14 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.39.5 லட்சம் ஊதியத்தில் வேலை வழங்கியது. இந்த வேலைவாய்ப்பு அட்டவணை 2019 அக்டோபர் இறுதி வரை தொடரும்.
இதன்மூலம், விஐடி, விப்ரோ தொடர்ச்சியாக 4-ஆவது முறையாக அதிக பணியமர்த்தலுக்காக லிம்கா புத்தகத்தில் இடம்பெற வாய்ப்புள்ளது. தொடர்ந்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வேலைவாய்ப்பு நேர்காணல் நடந்து வருவதால் வேலைவாய்ப்பு அட்டவணை அடுத்த ஆண்டு மே வரை செல்லும். எம்பிஏ, பொறியியல் அல்லாத வேலைவாய்ப்புகள் இந்த மாதத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.