5, 8-ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு: அரசாணை வெளியீடு (GO NO: 164 Date: 13.09.2019)

தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தைப் பின்பற்றி வரும் அனைத்துப் பள்ளிகளிலும் நிகழாண்டு முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேவேளையில் தேர்வு முடிவுகளை கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


நாடு முழுவதும் தற்போது, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, 5 -ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகக் கூறிவந்தது.
மத்திய அரசிதழில் வெளியீடு: இந்த நிலையில் ஐந்து, எட்டாம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் நாடு முழுவதும் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் கட்டாயத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தேர்வு முடிவு வெளியான இரண்டு மாதங்களில் உடனடித் தேர்வு நடத்த வேண்டும். அதிலும் மாணவர் தோல்வியடைந்தால் அவர்களை அடுத்த வகுப்புக்கு அனுமதிக்காமல், 5 அல்லது 8-ஆம் வகுப்பிலேயே மீண்டும் தொடர அனுமதிக்கவேண்டும்.


அதே நேரம், ஒரு மாணவர் தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை, எந்தக் காரணம் கொண்டும் அவரைப் பள்ளியைவிட்டு வெளியில் அனுப்பக் கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழகத்தில் எதிர்ப்பு: இதையடுத்து தமிழகத்தில் கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்தால் கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும்; இடை நிற்றல் அதிகரிக்கும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் பொதுத்தேர்வு நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டும். விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்படும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இருப்பினும் அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்தே தமிழகத்தில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு நிகழாண்டே பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வந்தது.
அரசாணை வெளியீடு: இந்தநிலையில் தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றி வரும் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டு (2019-2020) முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
தொடக்கக் கல்வி இயக்குநர் அளித்துள்ள கருத்துருவில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (திருத்தம்) 2019-இன் படி பள்ளிக் கல்வித்துறையின் கீழுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மற்றும் சுயநிதிப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், மாநிலப் பாடத் திட்டத்தைப் பின்பற்றும் இதர துறைகளின் கீழ் வரும் ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளில் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் அரசு பொதுத் தேர்வு நடத்துவதற்கான அனுமதியும் அந்தப் பொதுத்தேர்வு நடத்துவது சார்ந்து மாவட்டத் தேர்வுக்குழு அமைத்தல், தேர்வு மையம் மற்றும் தேர்வுக்கால அட்டவணை வெளியிடுதல், தேர்வுக்கட்டணம், விடைத்தாள்களை மதிப்பீடு செய்தல், தேர்வு மையங்களைப் பார்வையிடுதல் மற்றும் தேர்வு முடிவுகளை வெளியிடுதல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை அளித்து அதன்மீது அரசின் ஒப்புதலை கோரியுள்ளார்.


தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம்: தொடக்க கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு பரிசீலனை செய்து அதை ஏற்று 2019-2020-ஆம் கல்வியாண்டிலிருந்து 5 மற்றும் 8-ஆம் வகுப்புக்கு மாணவர்களுக்கு கல்வியாண்டின் இறுதியில் பொதுத்தேர்வு நடத்திட தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுமதியளித்தும், அந்தத் தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் எனவும் அரசு ஆணையிடுகிறது.
மேலும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான உரிய அறிவிப்புகளை வெளியிடவும், நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் மற்றும் அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.