Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 16, 2019

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட ராமதாஸ் வேண்டுகோள்!


5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை…

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருக்கிறது. சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்; இம்முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.



தமிழ்நாட்டில் காலம் காலமாக நடைமுறையில் இருந்து வந்த 8-ஆம் வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்வதற்கும், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கும் தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்குவதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், இதனால் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்கள் திணறுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறியிருக்கிறார். இது உண்மையல்ல.



அதேபோல், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதால் கல்வித்தரம் உயரும் என்று கூறப்படுவதும் உறுதிப்படுத்தப்பட்டதல்ல. தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் லட்சங்களைக் கொட்டி தங்களின் பிள்ளைகளை படிக்க வைத்தாலும் கூட, ஊரகப் பகுதிகளில் நிலைமை அப்படி இல்லை. கிராமப்புற ஏழைக் குழந்தைகள் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்களின் அறிவுறுத்தல்களை ஏற்று வேறு வழியின்றி தான் பள்ளிக்கூடங்களுக்கு வருகின்றனர். பள்ளிகளுக்கு செல்வதற்கு முன்பாக அவர்கள் ஏதேனும் வேலைக்கு சென்று சிறிது வருவாய் ஈட்டி விட்டோ அல்லது பெற்றோருக்கு ஆதரவாக அவர்கள் செய்யும் தொழிலில் உதவி செய்து விட்டோ தான் பள்ளிக்கு வருவார்கள். அவர்களுக்கு கல்வி என்பது இரண்டாம்பட்சம் தான். அப்படிப்பட்டவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி, அதில் அவர்களுக்கு தேர்ச்சி வழங்க மறுத்தால், அவர்கள் அத்துடன் படிப்பை நிறுத்தி விட்டு, முழுநேரமாக வேறு பணி செய்ய சென்று விடுவார்கள். இதனால் அனைவருக்கும் கல்வி என்ற மத்திய, மாநில அரசுகளின் முழக்கமே அரைகுறையாகிவிடும்.



உண்மையில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பது அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவாகும். ஆனால், 5 மற்றும் 8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தினால் மாணவர்களின் கல்வித் தரம் அதிகரிக்கும் என்பது எந்த அடிப்படையும் இல்லாமல் எடுக்கப்பட்ட முடிவு ஆகும். இந்த இரண்டு உண்மைகளையும் நிரூபிக்க ஏராளமான ஆதாரங்களை முன்வைக்க பாட்டாளி மக்கள் கட்சியால் முடியும்.

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்குவதில் தமிழ்நாடு தான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிக்காட்டி ஆகும். தமிழ்நாட்டை பின்பற்றி தான் 2009 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமை சட்டத்தில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்க வேண்டும் என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. அதன்பின்னர் இடைநிற்றல் விகிதம் பெருமளவில் குறைந்து விட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால், அதற்கு மாறாக கல்வித் தரம் குறைந்து விட்டதாகக் கூறி, கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்து விட்டு, 5 மற்றும் 8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வை கடந்த ஆண்டு முதல் மத்திய அரசு திணித்துள்ளது.



தேசிய அளவில் 6 ஆண்டுகள் மட்டுமே கட்டாயத் தேர்ச்சி நடைமுறையில் இருந்த நிலையில், கல்வித் தரம் குறைந்து விட்டது என்ற முடிவுக்கு எந்த ஆய்வுகளின் அடிப்படையில் மத்திய அரசு வந்தது என்பது தெரியவில்லை. எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் படிப்பதை உறுதி செய்ய வேண்டும்; அதன்பின் அவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என்பது தான் கல்வி உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கம் ஆகும். ஆனால், அந்த நோக்கத்திற்கு எதிராக 5 மற்றும் ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு முறையை கொண்டு வருவது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.



பள்ளிக்கல்வி பொதுப்பட்டியலில் தான் உள்ளது. அதனால், 5 மற்றும் 8&ஆம் வகுப்புகளுக்கு மத்திய அரசு பொதுத்தேர்வு முறையை அறிமுகப்படுத்தியது என்பதாலேயே தமிழகமும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இதுதொடர்பாக மருத்துவர் அய்யா அவர்கள் எழுப்பிய வினாவுக்கு விடையளித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன், ''தமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை. இதுதொடர்பாக வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தியே. அவற்றை நம்ப வேண்டாம்'' என்று கேட்டுக் கொண்டார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் இது தொடர்பாக சர்ச்சை எழுந்த போதும் அதே உத்தரவாதத்தை அமைச்சர் அளித்தார். ஆனால், இப்போது மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக பொதுத்தேர்வுகள் அறிமுகம் செய்யப்படுவதாக அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது.



உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதற்கு வலிமையான பள்ளிக்கல்வி கட்டமைப்பும் முக்கியக் காரணம் ஆகும். பெருந்தலைவர் காமராசர் முதல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்டோர் முதலமைச்சர்களாக இருந்த போது மதிய உணவு திட்டம், சத்துணவுத் திட்டம், இலவச கல்விக் கருவிகள் போன்றவற்றை வழங்கி தான் பள்ளிக்கல்வி கட்டமைப்பை வலுப்படுத்தினர். அதை 5 மற்றும் 8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டு வந்து சிதைத்து விடக் கூடாது. கிராமப்புற மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும். அதற்கு மாறாக 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கும் திட்டத்தை அரசு தொடர வேண்டும்.

No comments:

Post a Comment