சபாஷ் சரியான போட்டி!' - எக்ஸ் ஸ்ட்ரீம் பாக்ஸை அறிமுகப்படுத்திய ஏர்டெல்!


டெலிகாம் சந்தையைப் போல் பிராட்பேண்டு சந்தையிலும் பெரும் மாற்றத்தை ஜியோ கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜியோவின் போட்டி நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது பங்குக்கு எக்ஸ் ஸ்ட்ரீம் என்னும் புதிய சேவையை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தச் சேவையில் நேரலை டிவி (live tv), இசை, செய்திகள், ஸ்ட்ரீமிங் ஸ்மார்ட் ஸ்டிக், இணையம் மூலம் இயங்கும் செட்-அப் பாக்ஸ் எனப் பலவும் அடங்கும்.இப்படி ஏர்டெல் நிறுவனம் தனது செட்-அப் பாக்ஸ் சேவையை உள்ளடக்கி, இதை வெளியிட்டிருப்பது ஜியோவின் ஹைப்ரிட் செட்-அப் பாக்ஸுக்கு நேரடி போட்டியாகக் கருதப்படுகிறது. ஜியோ தனது சேவையில் நெட்பிளிக்ஸ் , ஹாட்ஸ்டார் மற்றும் இதர இணையச் சேவைகளையும் வழங்க உள்ளது. இத்துடன் தனது சொந்த சேவைகளான ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ சாவன், கேமிங்க், வீடியோ காலிங் மற்றும் செட்-அப் பாக்ஸ் மூலம் விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) சேவைகளையும் வழங்கவுள்ளது.இதேபோல் ஏர்டெல் நிறுவனமும் தனது எக்ஸ் ஸ்ட்ரீம் சேவையில் நூற்றுக்கும் மேற்பட்ட சாட்டிலைட் சேனல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்கள், ஆங்கில மொழி தொடர்கள் மற்றும் உள்ளூர் நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளது. மேலும் ஜீ5 போன்ற இதர ஸ்ட்ரீமிங் சேவைகள் தங்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஏர்டெலுக்கு அனுமதியை வழங்கியுள்ளது எனவும் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. தொலைக்காட்சி, பிசி, ஸ்மார்ட்போன் எனத் தங்களுக்கு விருப்பமான சாதனங்களில் இந்தச் சேவையைப் பெற முடியும்


ஏர்டெல் எக்ஸ்-ஸ்ட்ரீம் பாக்ஸின் விலை ரூ.3,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ரூ.999 மதிப்புமிக்க எக்ஸ் ஸ்ட்ரீம் சேவைகளும் ஒரு மாத காலத்துக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், ஏற்கெனவே ஏர்டெல் டிஜிட்டல் டிவியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் எக்ஸ் ஸ்ட்ரீம் பாக்ஸ் சலுகை விலையாக ரூ.2249-க்கு கிடைக்கும்.


ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்குவதால் பிரபல ஸ்ட்ரீமிங் தளங்களான அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ், ஈராஸ் நவ் போன்ற சேவைகளை இதில் பயன்படுத்த முடியும். இதற்கென பிரேத்யேகமாக ரூ.3,999 மதிப்புமிக்க எக்ஸ் ஸ்ட்ரீம் ஸ்டிக்கையும் அறிமுகம் செய்துள்ளது. இதைச் சாதாரண டிவியில் பொருத்திப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
எக்ஸ்-ஸ்ட்ரீம் பாக்ஸில் வைஃபை வசதியும் ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் குரோம்காஸ்ட் வசதியும் உள்ளன. இதனுடன் கூகுளின் வாய்ஸ் தேடலும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் யூடியூப்புக்கென பிரேத்யேக பட்டன்களும் உள்ளன. மக்கள் யார் பக்கம் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.