தாம்பூலப் பையில் விதைப் பந்து... மாணவர்களுக்குக் கல்வியுடன், சமூக அக்கறையையும் கற்றுக் கொடுக்கும் அரசுப்பள்ளி


தாம்பூலப் பையில் விதைப் பந்து...
மாணவர்களுக்குக் கல்வியுடன், சமூக அக்கறையையும் கற்றுக்கொடுக்கிறது ஓர் அரசுப் பள்ளி. விழுப்புரம் மாவட்டம், பள்ளிகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களின் சமூக அக்கறையால், அந்தக் கிராமத்தில் நடந்துள்ள மாற்றங்கள் ஏராளம். பசுமைக்காடு வளர்ப்புத் திட்டம், வீட்டுக்கொரு மரம் வளர்ப்புத்திட்டம், வீடுதோறும் கழிப்பறைத் திட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தப் பள்ளி மாணவர்களின் சமீபத்திய பணி, ஒரு லட்சம் விதைப் பந்துகளைத் தயாரிப்பது.இதுவரை 80 ஆயிரம் விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இந்த மாணவர்கள் விதைப் பந்து விற்பனையில் கிடைத்த பணத்தில், சிறப்புக் குழந்தைகளுடன் ஒருநாளை மகிழ்ச்சியாகச் செலவிட்டுள்ளனர். நெகிழ்ச்சியான இந்த நிகழ்வு குறித்து விவரிக்கிறார், மாணவர்கள் குழுவுடன் சமூகப் பணிகளுக்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் ஆசிரியர் தமிழரசன்.

``விதைப் பந்துகள் தயாரிக்கும் பணியை கடந்த மாதம் தொடங்கினோம். பள்ளி முடிந்து, மாலை நேரத்தில்தான் விதைப் பந்துகளைத் தயாரிப்போம். இதில், ஆர்வமுள்ள மாணவர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். இதுவரை 80 ஆயிரம் விதைப் பந்துகளைத் தயாரித்துள்ள நிலையில், அவற்றில் 75 சதவிகித பந்துகளை, பல்வேறு பகுதிகளிலும் வீசிவிட்டோம்.எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், அவருடைய திருமணத்தில் தாம்பூலப் பையில் விதைப் பந்துகளை வைத்துக்கொடுக்கத் திட்டமிட்டார். இதற்காக எங்களை நாடினார். நல்ல விஷயம் என்பதால், பேப்பர் கவரில் தலா இரண்டு விதைப் பந்துகள் வைத்து, 500 கவர்களை தயார்செய்து கொடுத்தோம். விதைப் பந்துகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள மனமில்லாத அவர், நாங்கள் மறுத்தும்கூட மாணவர்களின் உழைப்புக்கு மதிப்புக்கொடுத்து, ஒரு விதைப் பந்துக்கு இரண்டு ரூபாய் வீதம், இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தார். பிறகு இன்னொருவர் 500 விதைப் பந்துகளைப் பெற்றுக்கொண்டு, ஆயிரம் ரூபாய் கொடுத்தார்" என்கிற தமிழரசன், அதன் பிறகு மாணவர்கள் நிகழ்த்திய மனிதநேயமுள்ள செயல் குறித்துப் பேசுகிறார்.``கிடைத்த பணத்தை மாணவர்கள் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த நினைத்தார்கள். எங்கள் வட்டார வள மையத்தில் படிக்கும் 10 சிறப்புக் குழந்தைகளுக்கு, ஒருவேளை பிரியாணி உணவு, யோகா சீருடை, தின்பண்டங்கள், ஸ்டேஷனரி பொருள்கள் ஆகியவற்றை வாங்கிக்கொடுத்தோம். அந்த மாணவர்களுடன் ஒருநாள் முழுக்க நேரம் செலவிட்டு மகிழ்ச்சியடைந்தோம்.சமூகத்துக்குப் பயன்படாத கல்வி, பயனற்ற கல்வியாகிவிடும். படிக்கும் காலத்திலேயே சமூக அக்கறையுடன் எங்கள் பள்ளி மாணவர்கள் வளர்கிறார்கள். புதுப்புது முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம். எங்களைப் பின்பற்றி, எங்கள் கிராமமும் சமூகப் பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார், தமிழரசன். - நன்றி - விகடன்