Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 7, 2019

1,300 புத்தகங்களைக் கொண்டு சரஸ்வதிக்குக் கோயில்!' - அசத்திய கரூர் ஆசிரியர்


கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர், தங்க.கார்த்திக். இவர் கரூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.



புத்தககங்களால் ஆன சரஸ்வதி கோயில் கலைமீது தீராத காதல்கொண்டவரான தங்க.கார்த்திக், ஒவ்வொரு தமிழர் விழாக்களையும் வித்தியாசமான கலை மூலம் கொண்டாடுவது வழக்கம்.

அந்தவகையில், இவர் தான் பணிபுரியும் பள்ளியில், விஜயதசமி விழாவை மாணவர்கள் சிறப்பாக கொண்டாடும்வகையில், பள்ளியில் உள்ள நூலகத்தில் உள்ள 1300 புத்தகங்ளைக் கொண்டு கோயில் அமைத்திருப்பது, பலரது பாராட்டைப் பெற்றிருக்கிறது.




புத்தககங்களால் ஆன சரஸ்வதி கோயில்
இதுகுறித்து ஆசிரியர் தங்க.கார்த்திக்கிடம் பேசினோம். ``கலை தொடர்பான விஷயங்களில் எனக்கு ஆர்வம் அதிகம். அதோடு, கடந்த நாலு வருஷமா பள்ளியில் ஓவிய ஆசிரியரா வேலைபார்த்துட்டு வருகிறேன். மாணவர்களுக்கு கிரியேட்டிவாக இருக்கவேண்டும் என்பதற்காக புதுமையாக சில விசயங்களை செய்துகாட்டுவேன். அதேபோல், ஒவ்வொரு விழாவையும் அந்தந்த விழா சம்பந்தமான பொருள்களை கொண்டு நான் அமைக்கும் கலைவிசயங்களோடு கொண்டாடுவேன்.
மாணவர்களையும் அதை செய்ய சொல்லி வலியுறுத்துவேன். ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழாவை கொண்டாட, ராதாகிருஷ்ணன் உருவத்தை சாக்பீஸில் உருவாக்குவேன். அவர் ஆசிரியராக இருந்தவர் என்பதால், அதுசார்ந்த சாக்பீஸில் அவரது உருவத்தை அமைப்பேன். அதேபோல், பொங்கல் திருநாளை கொண்டாட, கரும்பு, பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருள்களை வைத்து, பானை செய்வேன். அந்த வகையில்தான், சரஸ்வதிக்கு உகந்த பள்ளிகூடங்களில் கொண்டாடவேண்டிய விஜயதசமி விழாவை மாணவர்கள் வித்தியாசமாக கொண்டாட வேண்டும்னு நினைச்சேன். அதுக்காக யோசிப்பதான், புத்தகங்களைக் கொண்டு, சரஸ்வதிக்கு கோயில் அமைக்கலாம்னு நினைச்சேன்.



அதுக்காக, பள்ளி நூலகத்தில் இருந்த 1,300 புத்தகங்களைப் பயன்படுத்தி, சரஸ்வதிக்கு கோயில் அமைத்தேன். நான்கு தூண்கள், அதன்மேலே 3 நிலைகள், அதுக்கு மேலே கலசம் என்று அனைத்தையும் புத்தகங்களைக் கொண்டே அமைத்தேன். இந்த கோயிலை வெறும் புத்தகங்களை அடுக்கியே அமைத்தேன். பசை எதுவும் பயன்படுத்தி ஒட்டியெல்லாம் அமைக்கவில்லை. இது பார்ப்பதற்கு சாதாரணமாக தெரியலாம். ஆனால், இதை ஒவ்வொரு புத்தகத்தின் எடை, கோணம், கிராவிட்டி என அனைத்தையும் மெஷர் பண்ணி, மிக துல்லியமாக அமைக்கணும்.



இல்லைன்னா, பத்து புத்தகங்களை அடுக்கும்போதே, கீழே சரிஞ்சு விழுந்துரும். இதை அமைத்து முடிக்க எனக்கு ஒருநாள் ஆனது. இதை பார்த்துட்டு பள்ளிகூடத்துல சக ஆசிரியர்களும், மாணவர்களும் என்னைப் பாராட்டினாங்க. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி அன்னைக்கும் விரும்பி பள்ளிக்கு வரும் மாணவர்களை கொண்டு, இந்த சரஸ்வதி கோயிலில் பூஜை செய்ய இருக்கிறோம். அதன்பிறகு, புதன்கிழை பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களை வைத்தும், இந்த புத்தகங்களால் உருவாக்கப்பட்ட சரஸ்வதி கோயிலில் பூஜைகள் பண்ணலாம்னு இருக்கோம்" என்றார், மகிழ்ச்சியாக.