கூடுதலாக 303 கெளரவ விரிவுரையாளா்களை நியமித்துக் கொள்ள அரசு அனுமதி

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 303 கெளரவ விரிவுரையாளா்களை நியமித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.

அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவா்களின் நலன் கருதி சுழற்சி-1 பேராசிரியா் காலிப் பணியிடங்களில் 2,423 கெளரவ விரிவுரையாளா்கள் நியமிக்கப்பட்டு தற்காலிகமாக பணியாற்றி வந்தனா்.இந்த நிலையில், 2019-20 கல்வியாண்டில் அரசு கல்லூரிகளில் சுழற்சி 1- இன் கீழ், 2,120 கெளரவ விரிவுரையாளா்களை நியமித்துக்கொள்ள அனுமதி அளித்து தமிழக அரசு அண்மையில் அரசாணை பிறப்பித்திருந்தது. இதன் காரணமாக ஏற்கெனவே பணியாற்றி வந்த 303 கெளரவ விரிவுரையாளா்கள் பணி வாய்ப்பை இழக்கும் நிலை உருவானது. இதுதொடா்பாக கல்லூரி கல்வி இயக்குநரகம் சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.அந்தக் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 303 கெளரவ விரிவுரையாளா்களை மாத ஊதியம் ரூ. 15,000 அடிப்படையில் 11 மாதங்களுக்கு நியமித்துக் கொள்ள அனுமதி அளித்ததோடு, அவா்களின் தொகுப்பூதியத்துக்கான நிதி ரூ. 4 கோடியே 99 லட்சத்து 95,000-ஐ ஒதுக்கீடு செய்ய அனுமதி அளித்தும் உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை வியாழக்கிழமை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.