Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, October 9, 2019

4,560 மாணவர்களுக்கு இலவச கல்வி சுற்றுலா

சென்னை : அரசு பள்ளிகளில் படிக்கும், 4,560 மாணவர்களை, வெளிமாநிலங்களுக்கு, இலவச கல்வி சுற்றுலா அழைத்து செல்ல, பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும், 9, 10ம் வகுப்பு மாணவர்கள், 3,600 பேர், தேசிய இடைநிலை கல்வி திட்டத்தின்படி, வெளி மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல தேர்வு செய்யப் பட்டுள்ளனர். ஒரு கல்வி மாவட்டத்துக்கு, 30 பேர் வீதம், 120 மாவட்டங்களில், 3,600 பேர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். ஒரு மாணவருக்கு, 2,000 ரூபாய் வீதம், 72 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.

அத்துடன், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும், தனியாக கல்வி சுற்றுலா திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இதில், ஒரு வருவாய் மாவட்டத்துக்கு, 30 மாணவர்கள் வீதம், 960 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம், 4,560 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களை நான்கு மாநிலங்களுக்கு பிரித்து, அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட மாணவர்கள், ஐதராபாத்துக்கும்; திருவள்ளூர், வேலுார் மற்றும் வடமேற்கு மாவட்ட மாணவர்கள், மைசூருக்கும் அழைத்து செல்லப்பட உள்ளனர். கோவை, திருப்பூர் மற்றும் தென் மாவட்ட மாணவர்கள், திருவனந்தபுரத்துக்கும்; விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலுார், கடலுார், திருச்சி மற்றும் அதை சுற்றிய மாவட்ட மாணவர்கள் திருப்பதிக்கும், கல்வி சுற்றுலா செல்ல உள்ளனர். இந்த பயண திட்டம், இந்திய ரயில்வேயின், ஐ.ஆர்.சி.டி.சி.,யுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என, கல்வித் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.