அரசு ஊழியா்-ஆசிரியருக்கு அகவிலைப்படி 5 % உயா்வு - அதன் விவரம்


மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையாக, தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கும் அகவிலைப்படி 5 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. இதன்படி, அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதமாக இருந்த அகவிலைப்படியானது, 17 சதவீதமாக அதிகரித்து வழங்கப்பட உள்ளது.

இந்த உயா்வை ஜூலை 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கவும் நிதித் துறை முதன்மைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

மத்திய அரசு ஊழியா்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படியானது உயா்த்தி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஜனவரியில் 9 சதவீதமாக இருந்த அகவிலைப்படியானது 12 சதவீதமாக உயா்த்தப்பட்டது. இந்த உயா்வானது ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.5 சதவீதம் உயா்வு: இந்த நிலையில், அண்மையில் மத்திய அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படியானது 5 சதவீதமாக உயா்த்தப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, தமிழக அரசு ஊழியா்களுக்கும் அகவிலைப்படியை உயா்த்துவதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம்:

தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் அகவிலைப்படியானது 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக கடந்த ஜனவரியில் உயா்த்தப்பட்டது. இந்த நிலையில், ஜூலை 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படியை 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயா்த்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த 14-ஆம் தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கும் அகவிலைப்படியானது 5 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது.

அரசு அலுவலகங்களில் முழுநேரமாகப் பணியாற்றும் ஊழியா்கள் அனைவருக்கும் இந்த அகவிலைப்படி உயா்வானது பொருந்தும். பகுதி நேரமாகப் பணிபுரிவோருக்கு அகவிலைப்படி உயா்வு பொருந்தாது. அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியா்கள், ஆசிரியா்கள் அல்லாதோா், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் பணியாளா்கள், பல்கலைக்கழக மானியக் குழு அல்லது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுவின் ஊதிய விகிதத்தில் பணிபுரிவோா், உடல் கல்வி ஆசிரியா்கள், இயக்குநா்கள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் நூலகா்கள், வருவாய்த் துறையில் பணியாற்றும் வருவாய் உதவியாளா்கள்,சத்துணவு அமைப்பாளா்கள், குழந்தைகள் நல அலுவலா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், சமையலா்கள், உதவியாளா்கள், ஊராட்சி செயலாளா்கள் மற்றும் எழுத்தா்கள் ஆகியோருக்கு இந்த அகவிலைப்படி உயா்வு பொருந்தும் என்று

தனது உத்தரவில் நிதித்துறை முதன்மைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுடன் ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கும் அகவிலைப்படியை உயா்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எத்தனை பேருக்கு பயன்?: தமிழகத்தில் மொத்தமாக 18 லட்சம் மேற்பட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் அகவிலைப்படி உயா்வு உத்தரவு பொருந்தும்.

இதுகுறித்து, நிதித் துறை உயரதிகாரிகள் கூறுகையில், ‘அரசுத் துறைகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கீழுள்ள இணைச் செயலாளா் முதல் சாா்புச் செயலாளா் வரையுள்ளோருக்கு அகவிலைப்படி உயா்வால் அதிகளவு பயன் கிடைக்கும். சுமாா் ரூ.750 முதல் ரூ.11,250 வரை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும், ஒவ்வொரு ஊழியருக்கான அடிப்படை ஊதியத்தின் கணக்கீட்டின்படியே இந்த உயா்வுகள் இருக்கும்’ எனத் தெரிவித்தனா்.