Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 14, 2019

ஆசியப் பண்பாட்டிற்குத் தமிழ்ச் சமய இலக்கியங்களின் பங்களிப்பு

பன்னாட்டுக் கருத்தரங்கம்
***************************
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டுத் தமிழர் புலம், குரு நானக் கல்லூரித் தமிழ்த் துறையுடன் இணைந்து ’ஆசியப் பண்பாட்டிற்குத் தமிழ் சமய இலக்கியத்தின் பங்களிப்பு’ எனும் பொருண்மையில் அக்டோபர் 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை, குரு நானக் கல்லூரியில் இப்பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் தமிழ் வளர்ச்சி மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமை தாங்கினார்.இக்கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் நோக்கவுரை ஆற்றினார். அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் மு. மூர்த்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அக்கல்லூரி முதல்வர் இரகுநாதன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் சைவ சித்தாந்த துறைப் பேராசிரியர் சா. சரவணன் அவர்கள் தொடக்கவிழாப் பேருரை ஆற்றினார். மயிலம் பொம்மபுர ஆதீனம் பெருந்தவத்திரு சிவஞான பாலாய சாமிகள் அவர்கள் கருத்தரங்க நூலினை வெளியிட்டு நிறைவு விழா ஆசிப் பேருரை வழங்கினார்.




ஆதீனம் அவர்கள் பேசுகையில் வேறு எங்கும் இல்லாத பண்பாடு ஆசியக் கண்டத்தில் காணப்படுகின்றது. பழக்க வழக்கங்கள் மற்றும் பண்பாட்டு அடிப்படையில் ஒற்றைத் தன்மை கொண்டதாக உள்ளது. பெரியோர்களை மதிக்கும் பண்பு, இறை கோட்பாட்டியல் ஆகியவற்றில் தமிழரின் பங்களிப்பு உள்ளது. தனி மனிதன் அல்லது சமூகத்தின் நாகரிக வளர்ச்சி என்பது பண்பாட்டின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றது பிறப்பின் அடிப்படையில் இல்லை என்றார். இதைத்தான் சமயத் தமிழ் வளர்த்த மகான்கள் சொல்லிச் சென்றனர் என்றார்.




இயக்குநர் கோ. விசயராகவன் அவர்கள் பேசுகையில் சமயம் என்பது வாழ்க்கை முறை , அதாவது மனிதனை நெறிப்படுத்தி அவன் உள்ளத்தைப் பக்குவப்படுத்தும் கருவி என்றார்.



முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் பேசுகையில் ஆசிய நாடுகள் முழுமையும் தமிழரின் இலக்கியத்தாக்கமும் பண்பாட்டுத் தாக்கமும் பரவி உள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் இது நமது வழிபாட்டு அடுக்குமுறை இந்த அடுக்குமுறை ஆசிய கண்டம் முழுவதுமே காணப்படுகின்றன. சீனாவில் இந்த அடுக்கு முறை மன்னன், மாதா, பிதா, குரு என்று உள்ளது. தமிழர்கள் வரலாற்று காலம்முதலே கடலோடிகளாக இருந்தவர்கள் உலகமெங்கும் தமது பண்பாட்டைப் பதிவு செய்துள்ளனர். தமிழரின் முழுமையான வரலாற்றுப் பதிவுகள் கோவில்களில்தான் உள்ளன. தமிழர்களால் எழுப்பப்பட்ட அங்கோர்வாட் கோவில் இதற்கு உதாரணம். அத்தகைய பண்பாட்டு பதிவினைக் கண்டறியும் நோக்கோடு நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் 40 கட்டுரைகள் வாசிக்கப்பட்டன என்றார் .




சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கைத் தூதரகத்தின் துணைத் தூதர் திரு. வெ. கிருஷ்ணமூர்த்தி, அமெரிக்க வலைத்தமிழ் நிறுவனர்-ஆசிரியர் பார்த்த சாரதி , கனடா தமிழ்ச் சங்கத் தலைவர் வள்ளிக்கண்ணன், சென்னை, அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியின் நூலகர் முனைவர் கோதண்டராமன், சென்னை தமிழிசைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் மீனாட்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.




மேலும்,குரு நானக் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கலாநிதி, அக்கல்லுரியின் பேராசிரியர்கள் ஜெயராமன், காயத்ரி, புனிதமலர் உள்ளிட்ட அயல்நாடுகளில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகைப் புரிந்த 250 க்கும் மேற்பட்ட ஆய்வறிஞர்கள் மாணவர்கள் இக்கருத்தரங்கில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.