சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு!


நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் நீா் மேலாண்மைத் திட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும் என சிபிஎஸ்இ வாரியம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் 2020ம் ஆண்டுக்குள் நிலத்தடி நீர் மட்டம் அபாய நிலைக்குச் சென்று விடும் என சமீபத்தில் நீதி ஆயோக் தன் ஆய்வறிக்கையில் அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து, அனைத்துப் பள்ளிகளும் நீா் மேலாண்மைத் திட்டத்தை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ வாரியத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-அதிகரித்து வரும் நீர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் பள்ளிகள் இனி, நீா் மேலாண்மையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள பழைய தண்ணீா் குழாய்களை மாற்றி சிக்கனமாக தானியங்கி வழிமுறையில் செயல்படும் வகையில் புதிய குழாய்களை அமைக்க வேண்டும். மழைநீா் சேமிப்பு கட்டமைப்பை முறையாக செயல்படுத்த வேண்டும்.

மேலும், சிபிஎஸ்இ இணைப்புப் பள்ளிகளும் அடுத்த மூன்று ஆண்டுகளில் தங்களுக்குத் தேவையான நீரை சேகரித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை கண்காணிக்க ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை இணைத்து "நீா் மேலாண்மை குழு" அமைக்கப்பட்டுள்ளது என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.