Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 19, 2019

தீபாவளிக்கு, 'விதை' வெடிகள்: தோட்டக்கலை துறை அசத்தல்


பொதுமக்களிடம், மரங்கள் மற்றும் செடிகள் வளர்ப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தீபாவளி பண்டிகைக்காக, 'விதை வெடிகள்' விற்பனையை, தோட்டக்கலை துறை துவக்கியுள்ளது.துரித உணவுகளால், சென்னை உள்ளிட்ட நகரங்களில், காய்கறிகள் மற்றும் கீரைகளை பயன்படுத்துவது குறைந்து உள்ளது.இதனால், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. மரங்கள் குறைவால், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வு காணவும், காய்கறிகள் சாகுபடி குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தீபாவளி பண்டிகையை ஒட்டி, வெடி விதைகளை தோட்டக்கலை துறையினர் அறிமுகப்படுத்தி உள்ளனர்.சென்னையில், தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா, மாதவரம் தோட்டக்கலை பூங்கா, அண்ணாநகர், திருவான்மியூர் தோட்டக்கலை பண்ணை ஆகியவற்றில், விதை வெடிகள் விற்கப்பட உள்ளன.

இதுகுறித்து, தோட்டக்கலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:களிமண், விதைகள், நுண்ணுாட்ட சத்துக்கள், உரங்களை பயன்படுத்தி, விதை வெடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சங்கு சக்கரம், ராக்கெட் வடிவிலான, இந்த விதை வெடிகளில், கத்திரி, வெண்டை, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள், நாவல், புளி உள்ளிட்ட பல்வேறு மரங்களின் விதைகள் உள்ளன.சுறுசுறுவர்த்தியில் கீரை வகைகளின் விதைகள் இருக்கும். பூத்தொட்டியில் கனகாம்பரம், சூரியகாந்தி மற்றும் தொட்டிகளில் வளரும் சிறிய பூக்களின் விதைகள் இருக்கும்.விதை பட்டாசின் விலை, ஐந்து ரூபாய். இந்த பட்டாசை வெடிக்க முடியாது. வெடியின் மாதிரி வடிவத்தில் தயாரிக்கப் பட்டுள்ள, விதை பந்துகள் தான் இவை. இந்த வெடி விதைகளை வாங்கி, தீபாவளி நாளில் விதைத்து, சுற்றுசூழலுக்கு மக்கள் உதவலாம். தங்களின் தேவைக்கான காய்கறிகளையும் உற்பத்தி செய்யலாம்.விதைகளின் விலை அதிகம் இருந்தாலும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, வேளாண்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, தோட்டக்கலைத்துறை இயக்குனர் சுப்பையன் ஆகியார், குறைந்த விலையில் விற்பதற்கு, அரசிடம் அனுமதி பெற்று தந்துள்ளனர்.இவ்வாறு, அவர் றினார்.